தமிழ் முகில்

Friday, June 24, 2005

fwd மெயில் : கோமாளித்தனங்கள்!

"அந்தப் புகைப்படத்தை பார்த்தீர்களா? என்ன 'திகில்' கொடுப்பதாக உள்ளதா! கட்டிலுக்கு அடியில் இருப்பது விபத்தில் செத்த ஒரு இளம் பெண்! கட்டிலின் மேலே இருப்பது விபத்திற்கு காரணமானவன். இப்போது இந்த திகில் பெண் வெறியோடு அலைந்து கொண்டிருக்கிறாள். அவளிடமிருந்து நீங்கள் தப்பிக்க வேண்டுமா... உடனே இந்தப் புகைப்படத்தை 5 பேருக்கு மெயிலில் அனுப்புங்கள். இல்லையேல் இன்று இரவே அந்தப் பெண் உங்கள் உயிரை அபகரிக்க வந்து விடுவாள். ஆம்.. இது நிஜம்! சிட்னியில், லாஸ் ஏஞ்சல்ஸில், டெக்ஸாசில் இந்தப் புகைப்படத்தை 5 பேருக்கு அனுப்பாமல் அலட்சியமாக delete செய்த சிலர் இப்போது இல்லை. ஆம் இது நிஜம்! ஜாக்கிரதை!!!"

Image hosted by Photobucket.com
- இது எனக்கு இன்று வந்த fwd: மெயில். (அனுப்பிய பைத்தியக்காரன் - மேலும் 4 பேருக்கு அனுப்பியிருந்தான்.)

முன்பு, (இப்பொழுதும் இருக்கும் என நினைக்கிறேன்) "இந்த நோட்டீஸை கண்டெடுப்பவர்கள் - இதே போல் 1000 நோட்டீஸ் அடித்து விநியோகிக்க வேண்டும். செய்தால் 'மங்களம்' உண்டாகும். இல்லாவிட்டால் தீயவை உங்கள் வாழ்வில் நேரும்" என கீழே பிரிண்டிங் பிரஸ் முகவரியுடன் தெளிவாக கொடுத்திருப்பார்கள். அந்த கலாச்சாரம்(!) இப்போது அப்-டேட்டாகி, இப்படி மெயில், மெயிலா மேய்ஞ்சுகிட்டு இருக்கு! பொதுவா இப்படி fwd: ஆகி வருகிற மெயில்களோட ஆணிவேர் ஏதாவது பிரபல 'சாஃப்ட்வேர்' கம்பெனியோட மெயில் ஐடியாத்தான் இருக்குது! ..ம், இவங்களைத் திருத்தணும்னா பெரியாரைத்தான் பிராஜக்ட் லீடராப் போடணும்!
ஒரே வரியில சொல்லணும்னா
'மூட நம்பிக்கைகள் நவீனமாகிக் கொண்டு வருகின்றன!'

Friday, June 17, 2005

'ஜோதிடக்குடி தாங்கி' கோயிஞ்சாமி வழங்கும்...

'ஜோதிடக்குடி தாங்கி' கோயிஞ்சாமி அவர்கள் வழங்கும் சனிப் பெயர்ச்சிப் பலன்கள்

Image hosted by Photobucket.com


மேஷ ராசி மக்களே!எப்பா, ரெண்டாவது மாடியிலிருந்து, மூணாவது மாடிக்கு சனி பெயர்ச்சி ஆகறதால, நீங்க 2ல இருந்தா 1க்கும், 1ல இருந்தா 0க்கும், 0ல இருந்தா, அதான் கீழ் போர்ஷன்ல இருந்தா பூமிக்கடியில போயும் ஒளிஞ்சிக்கோங்க!
மேலும் நீங்க இங்கிலீசுல 'a,e,i,o,u', அப்புறம் தமிழில 'கசடதபற'ல ஆரம்பிக்கிற வார்த்தைகளை 126 நாள் பேசக்கூடாது.
பேசுனா உங்க நாக்குல சனி நாற்காலி போட்டு உட்காந்துக்கும்.
பரிகாரம்: ராமராஜனை உங்க காஸ்ட்யூம் ட்சைனரா நியமிச்சு, அவரு சொல்ற கலருல வலம் வருதல் ஷேமம்.

ரிஷப ராசி மக்களே!
நீங்க அடுத்த ஆறு மாசத்துக்கு நேரா நிமிந்து நடக்கக்கூடாது. 98.3டிகிரி சாய்ஞ்சாப்ல நடக்கறது நல்லது. முக்கியமா
நடக்கறப்போ உங்க வலது காலும், இடது காலும் உரசவே கூடாது. அப்படி நடக்காட்டி என்ன ஆகும்னு கேக்கறீகளா,
நடக்கக்கூடாததெல்லாம் நடந்துரும்.
பரிகாரம்: உங்களுக்கு ஏழரை உச்சத்துல உட்கார்ந்துறதால, 'நாலரை பால்' குடிக்கிறது நல்லது.

மிதுன ராசி மக்களே!எஸ்.எம்.எஸ் அனுப்பி அனுப்பியே, முடக்குவாதம் வந்த மிதுன மக்களே, அடுத்த சனிப்பெயர்ச்சி வரை நீங்க செல்லை கையால தொடக்கூடாது, காதாலயும் தொடக்கூடாது. சனி எட்டாம் பாதத்துலயிருந்து 'நோக்கியா'. அதனால செல்லோட யாரும் பக்கத்துல வந்தாக்கூட கல்லைக் கண்ட நாய் மாதிரி தெறிச்சு ஓடுறது நலம்.
இல்லாட்டி சனி ரிங்டோ னா 'சங்கு சவுண்டை' அனுப்பி வைக்கும்.
பரிகாரம்: ரிலையன்ஸ் அம்பானிக்கு வாராவாரம் ஞாயித்துக்கிழமை நெய் விளக்கு போடணும்.

கடக ராசி மக்களே!
மெட்டி ஒலிக்கும், கெட்டிமேளத்துக்கும் வித்தியாசம் தெரியாம திரியுற நீங்க, இன்னும் ஏழரை மாசத்துக்கு, டி.விப் பொட்டியில, 'பச்ச' & 'மஞ்ச' கலரைப் பாக்கக்கூடாதுங்கோ. 'கருப்பு-வெள்ளை' டி.வி. பாக்கலாமான்னு கருமம் புடிச்சாப்ல
கேட்காதீக. பாக்கலாம். ஆனா 'ஒப்பாரி' சவுண்டைக் கேட்கக் கூடாது. அரசியல்வாதிகளைப் பாக்கக் கூடாது. ஏன்னா,
இவ்வளவு நாள் உங்க வீட்டு டேபிள்ல இருந்த சனி இப்போ உங்க வீட்டு கேபிளுக்கு பெயர்ச்சி ஆயிருக்கு.
பரிகாரம்: உங்க வீட்டு ரிமோட்டை உடனடியா எடுத்துட்டுப் போய், பேங்க் லாக்கர்ல வைச்சிருங்கோ!

சிம்ம ராசி மக்களே!சனியும், ராகுவும் ஒரே நேரத்துல நாலாம் பாதத்துக்கு 'Login' ஆகியிருக்கறதால, இன்னும் 222 நாளுக்கு நீங்க இமெயில் செக் பண்ணக்கூடாது. சாட் ஆகவே ஆகாது. 'google' பக்கம் தலை, கை, கால் எது வைச்சும் படுக்கக்கூடது. முக்கியமா வலைப்பதிவை கொலைவெறியோட பண்ணுறவங்க, அந்தப்பக்கமே வரக்கூடாது. இதுல எதையாவது
மீறினா, சனி அனுப்புற வைரஸால உங்க சிஸ்டம் புட்டுக்கும்.
பரிகாரம்: 'ஸ்ரீபில்கேட்ஸ் ஜெயம்'னு டெய்லி நோட்பேட்ல 100kb டைப் பண்ணுறது உத்தமம். (cut copy paste ..ம்ஹூம்!)

கன்னி ராசி மக்களே!ஹைக்கூ.. பைக்கூ.. கொக்கரக்கூ.. இப்படி எந்தவித கவிதைகளையும் உங்க வாழ்க்கையில நீங்க இன்னும் அரை வருசத்துக்கு நுழையவிடக்கூடாது. வைரமுத்து, வாலி வகையறாக்களை பாத்தா உங்க வாய் 'வாய்தா' வாங்கிட்டு போயிடறது நல்லது. முக்கியமா பின்நவீனத்துவக்காரங்ககிட்ட முன்னெச்சரிக்கையா இருக்கறது நல்லது. இதையெல்லாம் மீறி நீங்க காதல் கவிதை படிச்சீங்கன்னா, உங்க கண்ணை 'சனி பகவானோட' காக்கா வந்து கொத்திரும்.
பரிகாரம்: வாரம் ஒருமுறை மூணு கிலோ 'கவித' பொஸ்தகம் வாங்கி, 'கழுதை'க்கு தானம் பண்ணனும்.

துலாம் ராசி மக்களே!
அந்நியன் படத்துக்கு டிக்கெட் கிடைக்காம ஆத்திரத்துல சனி பாதத்துக்குப் பாதம் 'பங்கி ஜம்ப்' ஆடிக்கிட்டு இருக்கறதால, இன்னும் நாலேகால் மாசத்துக்கு நயன்தாராவைப் பாக்கக்கூடாது. அஸின் ஆகவே ஆகாது. நீங்க 'ஐஸ்'ஸை நைஸாப் பாத்தா சனியோட கோபம் பல மடங்கு, 'raise' ஆக வாய்ப்பிருக்கு. முக்கியமா, தியேட்டர், டி.வி, விசிடி இப்படி எதுல சினிமா பாத்தாலும் உங்களுக்கு சனிமா!
பரிகாரம்: 'லகலகலகலகலகா'ன்னு சொல்லிட்டே, உங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்கிற தியேட்டரை டெய்லி பத்து மு
றை சுத்தணும்.

விருச்சிக ராசி மக்களே!யார் எதைச்சொன்னாலும் கேட்காத விருச்சிக மக்களே, நான் இப்ப சொல்லுறதையும் நீங்க கேட்கப்போறதில்ல. அதனால நானும் எதுவும் சொல்லப் போறதில்ல!
பரிகாரம்: யார் என்ன பரிகாரம் சொன்னாலும் செய்யாமலிருப்பது.

தனுசு ராசி மக்களே!நீங்க 'i'ல ஆரம்பிக்கிற பேங்குல அக்கௌண்ட் வைச்சிருந்தா உடனே அதை வேற எங்கேயாவது மாத்திடுங்க. இன்னும் 8 மாசத்துக்கு 'i'யோட சகவாசமே ஆகாது. 'நான்'-ஐ இங்கிலீசுல எப்படி சொல்லணும்னு யாராவது கேட்டாக் கூட 'You'னு உளறுவது நல்லது.
பரிகாரம்: 'i'யை எங்கப் பாத்தாலும் தார் பூசி அழிச்சிடுங்க!

மகர ராசி மக்களே!வாஸ்துப்படி சனி உங்களுக்கு பெயர்ச்சி அடைஞ்சிருக்கறதால, இன்னும் 7 மாசத்துக்கு நீங்க உங்க வீட்டுக்குள்ள முன்வாசல் வழியா நுழையக்கூடாது. பின்வாசலும் ஆகாது. அதனால சன்னல் வழியா போனா இன்னல் இருக்காது. டூ பாத்ரூம் டாய்லெட்ல போகாதீங்க. கோலத்தை வாசல்ல போடாதீங்க. மீறினா, தேற மாட்டீங்க.
பரிகாரம்: பேசாம கொஞ்ச நாளைக்கு ப்ளாட்பாரத்துல வாழுங்க!

கும்ப ராசி மக்களே!
இப்ப 'கரண்ட்'ஆ நடந்திருக்கிற சனிப் பெயர்ச்சியால, உங்களுக்கு 'கரண்டுல' கண்டம். அதனால வீட்டுல உள்ள எ
லெக்ட்ரிக் ஐயிட்டத்தையெல்லாம் வித்துடுங்க. ஜீரோ வாட்ஸ் பல்பு கூட இருக்கக் கூடாது. சொல்லப்போனா, பேப்பர்ல
வர்ற 'கரண்ட்' நியூசைக்கூட படிக்கக்கூடாது.
பரிகாரம்: ஏதாவது ஆதிவாசி கிராமத்துக்குப் போயி தலைமறைவா வாழுங்கோ!

மீன ராசி மக்களே!சனி நார்த் ஈஸ்ட்டுக்கும், சௌத் வெஸ்ட்டுக்கும் இடையில ஈஸ்ட்வெஸ்ட்டுல ரெண்டு டிகிரி நகர்ந்து இருக்கிறதால, நீங்க அடுத்த பஸ்ஸையோ, ட்ரெயினையோ புடிச்சு சனிக் கெரகத்துக்கு போயிடுறது நல்லது.
பரிகாரம்: எந்த ஜோசியக்காரனைப் பாத்தாலும் வெக்கப்படாம கடன் கேளுங்க!

(மேலும் பலன்களை அறிந்துகொள்ள iamnothere@sani.com-க்கு மெயிலுங்க!)

சனிப் பெயர்ச்சி பலன்கள் - .100%True

கூடிய சீக்கிரத்துல 'சனி' பெயர்ச்சி ஆகப் போகுதாம். அதுக்கு ஏதோ பலன்கள் எல்லாம் உண்டாம். ஆளாளுக்கு 'பலன்களை' சொல்லி விற்பனையைப் பெருக்கி 'பலன்களை' அனுபவிக்கிறாங்க! நம்மோட 'குல தெய்வம்' கூகுள்தான்! அதனால அதுல தேடி ஒவ்வொரு ராசிக்கும், பலன்களை தொகுத்து எனக்கு இமெயில்ல தந்திருக்காரு 'ஜோதிடக்குடிதாங்கி'. அறிய ஆர்வமா இருக்கீங்களா? கொஞ்ச நேரம் பொறுங்க! இதோ வந்துகிட்டே இருக்கு சனி...

Wednesday, June 15, 2005

தேவை விளக்கம்...

ஒரு பெண். அவளின் இயல்பான நிறம் என்னவென்று தெரியவில்லை. அப்பொழுது கருப்பாக இருந்தாள். அழுக்குப் படிந்து படிந்து அவள் கட்டியிருந்த சீலை(!) முழுவதும் கருப்பாகவே மாறியிருந்தது. அதனால் அவள் சிரித்தபோது உண்மையிலேயே 'மின்னல்' வெட்டினாற்போல் தான் இருந்தது. ஒரு நளினமான நடைபோட்டு ('கேட் வாக்' என்றுகூட சொல்லலாம்) பேருந்து நிறுத்தத்திற்கு வந்தாள். 'ச்சாமிமிஇஇஇ...' என ஒரு விநோதமான குரல்
எழுப்பினாள். கையை வாயிற்கும், வயிற்றிற்கும் இடையே வேகமாக ஆட்டி, பிச்சை கேட்டாள். அந்த இளைஞர் ஒரு நாணயத்தைக் கொடுத்தார். அவரிடமிருந்து நகர்ந்த அவள், வயதான ஒருவரின் அருகில் சென்றாள். அவர் 'போ.. போ..' என விரட்டவே, மீண்டும் அந்த இளைஞரிடமே வந்து
நின்றாள். பழையபடியே யாசிக்க ஆரம்பித்தாள். அந்த இளைஞர் செய்வதறியாது நிற்கவே, 80களில் தமிழ் சினிமா கதாநாயகிகள் பாடல் காட்சிகளில் நடனமாடுவது போல் ஆடத்தொடங்கினாள். அதிர்ந்து போய் அந்த இளைஞன் அங்கிருந்து நகரவே, வேறு சில ஆண்களிடம் ஆரம்பித்தாள். பெண்களின் அருகில் செல்லவே இல்லை. மாறாக தூரத்தில் நின்று அவர்களை திட்டுவது போல் சைகை காட்டினாள். பின் அங்கிருந்து மறைந்தாள்.



சடையாகிப் போன முடி, அடர்ந்து வளர்ந்த தாடி, பல கிழிசல்களுடைய உடை, அவன் தோல்கள் முழுவதும் பல துண்டுத் துணிகள், மிக வேகமாக நடந்து வந்தான். திடீரென்று குனிந்து, தரையிலிருந்து ஒரு துண்டு சிகரெட்டை எடுத்தான். ஸ்டைலாக நின்று, வானை நோக்கி, இல்லாத புகையை விடத் துவங்கினான்.

இப்படி பல மனிதர்களை, மன நலம் சரியில்லாதவர்களை நாம் தினமும் சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறோம். பார்க்கிறோம். அவர்களிடமிருந்து
விலகி ஓட நினைக்கிறோம். (இதுதான் சராசரி மனித இயல்பு. நான் உட்பட!) கன்னியாகுமரியில் இப்படிப்பட்ட மனிதர்கள் நிறைய அலைவதாக சமீபத்திய வார இதழ்கள், நாளிதழ் செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்களின் நிலை பற்றி அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? ஏர்வாடியில் நடந்த அந்தத் துயரச் சம்பவத்திற்குப் பின் கொஞ்ச காலம் அரசு எந்திரங்கள் சுறுசுறுப்பாக செயல்பட்டதுபோல் தெரிந்தது!

இப்படி சமூகத்தில் அவல நிலையில் அலையும் இந்த மனிதர்களுக்காக அரசு தனி காப்பகங்கள் அமைத்தால் என்ன? இதற்காக மனித உரிமைக் கழகங்கள்தான் முழுவீச்சில் குரல் கொடுக்க வேண்டும்.

(இந்தப் பிரச்னை இதுவரை என்னென்ன நடவடிக்கைகள் அரசால் எடுக்கப்பட்டுள்ளன என்று எனக்குத் தெரியவில்லை. இது பற்றி மேலும் விவரமறி
ந்த நபர்கள் பின்னூட்டம் கொடுக்கவும்.)

Monday, June 13, 2005

இடைத்தேர்தல் மேனியா!

சமீபத்தில் இந்தியாவில் நிகழ்ந்து வரும் 'மேனியா' இது! இதைப் பற்றி புள்ளி விவரங்களோடு தன் கருத்துக்களை அள்ளித் தெளித்திருக்கிறார்
புதிய வலைப்பதிவர் திரு. சொ.
(சோ அல்ல!) வாசித்து, யோசித்து பின்னூட்டம் தோணினா அதையும் பண்ணிடுங்க!

Friday, June 10, 2005

ஹைய்யா! முடியப் போகுது!!

தமிழ்நாட்டில் இன்றைய தேதியில் ஏதாவதொரு தொகுதியில் இடைத்தேர்தல் வந்தால், நான் ஒரு வேட்பாளரை நிறுத்தத் தயாராக உள்ளேன். பெரிய தலைகள் யார் வேணும்னாலும் நிக்கட்டும், நம்மாளு சொல்லி ஜெயிப்பாரு! அவ்வளவு பவர் உள்ள ஆளு யாருன்னு கேட்கறீங்களா? அது எந்த 'காந்த்'ம் இல்ல! அவர் பெயர்... சிதம்பரம்! ஆமா, 'மெட்டி ஒலி' பாசக்கார அப்பா சிதம்பரமேதான்!
தமிழக (அனைத்து தரப்பு) மக்களின் ஆதரவு பெற்ற ஒரே வேட்பாளர் இப்போ இவர் மட்டுமே!
'போயிட்டியே... போயிட்டியே'ன்னு நைட்டு ஒன்பது மணிக்கு மேல தமிழ்நாடே 'எலவு' வீடாட்டம் மாறிடுது! இன்னும் 16 நாளைக்கு காரியம் நடக்கும்போல!
அய்யா சாமி.. இதோ மெட்டி ஒலி சீக்கிரம் முடியப் போகுதுன்னு எதோ ஒரு பத்திரிக்கையில போட்டிருந்ததைப் பார்த்து சந்தோஷப்பட்டேன். அந்த 'சீக்கிரத்தோட' அர்த்தம் மூணு, நாலு மாசம்னு எனக்கு அப்ப புரியல!
Image hosted by Photobucket.com

மெட்டியோட ஒலியே இவ்வளவு வருசத்துக்கு ஒலிக்குதுன்னா, இவங்க இந்த சீரியலுக்கு 'மேள ஒலி'ன்னு பேரு வைச்சிருந்தாங்கன்னா... அய்யா சாமி, நினைச்சுக்கூட பார்க்க முடியல!

'எதையும் தாங்கும் இதயம் கொண்ட' தமிழக மக்கள் - இனி எந்த ஒலியையும் தாங்குவார்கள் என்பதில் சந்தேகமேயில்லை!

(பின் குறிப்பு: நான் இதுவரை அதிகபட்சம் 50 எபிசோட்கள் மட்டுமே பார்த்துள்ளேன்)

Wednesday, June 08, 2005

டயானாவும், உலகமயமாக்கலும்!

கேள்வி: உலகமயமாக்கலின் உச்சம் எது?

பதில்: டயானாவின் மரணம்!

Image hosted by Photobucket.com

கேள்வி: எப்படி?

பதில்: இங்கிலாந்து இளவரசி டயானா, தன் எகிப்திய ஆண் நண்பரோடு, ஒரு
ப்ரெஞ்ச் சுரங்கப் பாதையில் விபத்தைச் சந்தித்தார். அவர் சென்றது ஜெர்மன் கார். அதில் இயங்கியது டட்ச் இஞ்ஜின். பெல்ஜியத்தைச் சேர்ந்த அந்த ஓட்டுனர் அருந்தியிருந்தது ஸ்காட்ச் விஸ்கி. அவர்களை தன் ஜப்பானிய மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து சென்றவர் ஒரு இத்தாலிய பப்பாரஸி. விபத்தில் சிகிச்சை செய்தவர் ஒரு அமெரிக்க டாக்டர். உபயோகித்தது மருந்துகள் பிரேசிலில் இருந்து வரவழைக்கப்பட்டவை. இதை இப்போது உங்களிடம் பகிர்ந்து கொண்டிருக்கும் நான் ஒரு இந்தியன், உபயோகிப்பது பில்கேட்சின் தொழில் நுட்பத்தை. நீங்கள் இதை உங்கள் IBM சிஸ்டத்தில் வாசித்துக் கொண்டிருக்கலாம். அந்த சிஸ்டத்தில் இருப்பது தாய்வானில் உருவாக்கப்பட்ட சிப்ஸ், கொரியாவில் தயாரிக்கப்பட்ட மானிட்டர்கள், அதைக் கட்டமைத்தவர்கள் பங்களாதேஷ்காரர்கள், தொழிற்சாலை உள்ள இடம் சிங்கப்பூர். இவை இந்திய லாரி டிரைவர்களால் டிரான்ஸ்போர்ட் செய்யப்பட்டு, பாகிஸ்தானியர்களால் கடத்தப்பட்டு, இறுதியில் சைனாக்காரர்களால் உங்களுக்கு விற்கப்பட்டிருக்கும்.

இதுதான் உலகமயமாக்கல்!!!

(எனக்கு வந்த Fwd: மெயிலின் தமிழாக்கம்!)

Monday, June 06, 2005

கிளிக்கு ஜோசியம்?!

சென்னை... ஜூன் 3... மாலை 6.35...

மாநகரப் பேருந்து... வழக்கத்திவிட கூட்டம் கம்மிதான்! (ஒருவரின் மூச்சு, மற்றொருவர் மேல் படாதபடி நிற்க முடிந்தது.)

திடீரென பேருந்திற்குள் "..க்கீ ..க்கீ" என கிளி கத்தும் சப்தம்.

"யாரோட கிளிய்யா இது?" ஒருவரின் கேள்வி!

'என்னது, இந்தக் கூட்டத்துல, இந்த இடத்துல கிளியா!' என ஒவ்வொருவரின் பார்வையும் கிளியை நோக்கி பறந்தது.

அதற்குள் கிளியைப் பிடித்திருந்தார் இன்னொருவர்.

பதறியபடியே எழுந்தார் பின் இருக்கையின் ஓரத்தில் அமர்ந்திருந்த அந்த பெரியவர், "கொண்டாங்க, கொண்டாங்க" என கிளியை அவசரமாக வாங்கி,

தன் காலின் கீழிருந்த கூண்டிற்குள் வைத்து அடைத்தார்.

மீண்டும் "..க்க்கீ..க்கீ" சப்தத்துடன் அடங்கிப் போனது கிளி.

70 வயது மதிப்புமிக்க அந்த கிளி ஜோசியக்காரரும் அமைதியானார்.

Image hosted by Photobucket.com

என் மனதில் சில கேள்விகள் பெண்டுலமாகத் தொடங்கின.

கிளி எப்படி தப்பித்தது?

இப்படித் தப்பிப்பதற்காக அது நீண்ட நாள் முயற்சி செய்திருக்குமோ?

இன்று, கூட்டம் குறைவாக இருந்ததால் உயிர் தப்பியது! வழக்கம்போல் அதிகக் கூட்டம் இருந்திருந்தால்... மிதிபட்டே _________!

அப்படியே யார் கண்ணிலும் படாமல் தப்பித்திருந்தாலும், இறக்கை இல்லாத அந்தக் கிளியால் பறக்கக்கூட முடியாதே?

கிளியை இழந்திருந்தால், இந்த வயசில் அந்தப் பெரியவர் பிழைப்புக்கு வேறென்ன செய்வார்?

பிறருடைய வருங்காலத்தை கணிக்க, சீட்டெடுத்துக் கொடுக்கும் அந்தக் கிளி என்றாவது தனக்கு சீட்டெடுத்துப் பார்த்திருக்குமா?

மீண்டும் அதே பேருந்தில், அதே கிளியை, அதே பெரியவரை சந்திப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது. விடை கிடைத்தால் சொல்கிறேன்.