தமிழ் முகில்

Thursday, December 29, 2005

என்ன புத்தகம், கண்டுபிடியுங்க?

மனத்தில் பட்டதை மறைத்துப் பேசத் தெரியாத காரணத்தாலேயெ தமிழ் சினிமா உலகம் புறக்கணித்த மிகப்பெரிய கலைஞர் இவர்.
மிகப்பெரிய போராட்டத்துக்குப் பின் திரையுலகுக்கு வந்த இவர், மிகக் குறுகிய காலத்தில் அளப்பரிய சாதனைகள் செய்துவிட்டு இறந்துபோனவர். தமது சொந்த வாழ்க்கையின் ஆறாத சோகங்களை மறைத்துக் கொண்டு மக்களைச் சிரிக்கவைத்த மகத்தான கலைஞர். சற்றும் நம்பமுடியாத அதிரடிக் கருத்துக்களை அடிக்கடி வெளியிட்டு, திரைத் துறையினரை தர்ம சங்கடத்துக்கு உள்ளாக்கியவர்.


எனது அடுத்த பற்றிய மேலும் சில குறிப்புகள்தான் இவை.யாருன்னு கண்டுபிடிச்சிருப்பீங்களே?!

விடை - புத்தக முகப்பு அட்டையுடன் - விரைவில்!

Tuesday, December 27, 2005

என்ன புத்தகம்? கண்டுபிடியுங்க!

அடுத்த புத்தகத்தை எழுதி முடிச்சுட்டேன். புத்தகம் தற்போது அச்சகத்தில் மையம் கொண்டு இருக்கிறது. சென்னை புத்தகக் காட்சியில் தாக்கும் என எதிர்பார்க்கிறேன். என்ன புத்தகம்? ஒரு சரிதை. வெளியீடு : கிழக்கு பதிப்பகம்.
யார்? என்ன புத்தகம்? சில குறிப்புகள் தருகிறேன். பதில் சொல்லுங்கள். ஏற்கனவே இதைப் பற்றித் தெரிந்த நண்பர்கள் (ரஜினி ராம்கி, ஐகாரஸ் பிரகாஸ், க்ருபா சங்கர், சுவடு ஷங்கர்+++) பதில் சொல்ல வேண்டாம். மற்றவர்கள் முயற்சி செய்யவும்.

* நடிகர்.. (நல்ல நடிகர்)
* பாடகர்.. (சிறந்த பாடகர்)
* இறந்து விட்டார்.
* அவர் தன்னைப் பற்றி செய்து கொண்ட சுயவிமர்சனம் இதுதான்.

"என்னை முற்றிலும் புரிந்து கொண்டவர்கள் யாருமில்லை.
என் பெற்றோர்கள் கூட என்னைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. ஆகவே மற்றவர்கள் யாராவது என்னைப் புரிந்து கொண்டதாகச் சொன்னால் என்னால் நம்புவதற்குக் கடினமாகத்தான் இருக்கிறது. சிரிப்பை அடக்குவதற்கும் கஷ்டமாகத்தான் இருக்கிறது"

என்ன... யாருன்னு தெரியுதா?
பின்னூட்டங்களை எதிர்பார்க்கிறேன்.

Monday, December 26, 2005

எச்சரிக்கை

Monday, December 19, 2005

மெய்யாலுமா?

பாகிஸ்தான்ல இப்படித்தான் அதைத் தயாரிக்காங்களாம்.. எதை? எனக்கு வந்த ஃபார்வர்டு மெயிலை அப்படியே கண்காட்சிப் படுத்தியிருக்கேன். ஒரு தபா வந்து பாருங்க..

1. கடையில ப்ரௌன் கலர் பானம் வாங்கி..


2. பழைய பெப்ஸி பாட்டிலை கழுவி..

3. ட்ரேயில வரிசையா அடுக்கி..

4. புனலை வைச்சு ஊத்தி..


5. 'gas' நிரப்பி..


6. பிராண்ட் மூடியை எடுத்து...

7. பெர்ஃபக்டா பொருத்திட்டா, மேட்டர் ரெடி!


மெய்யாலுமா? இப்படித்தான் நடக்குதா?

Monday, December 12, 2005

கழுதைகள் மன்னிக்கவும்! (கோர்ட்டில் கேஸ் போட வேண்டாம்.)



ஆட்டையாம்பட்டி என்றொரு அழகிய குக்கிராமம். (இந்தக் கிராமம் தமிழ்நாட்டில் இல்லை. ஏன் இந்தியாவிலேயே இல்லை. இது ஒரு வெர்ச்சுவல் கிராமம் என்று வைத்துக் கொள்வோமே!) இது திரு மற்றும் திருமதி என்ற இரண்டு கதாபாத்திரங்களைச் சுற்றி வரும் கதை. அவர்களின் மழலைக் காலத்தில் ஆரம்பித்து இளமைக் காலத்தில் தொடர்வதாய் உருவாக்கப்பட்ட கதை.
திருவுக்கு அப்போது ஒரு வயது இருக்கும். திருமதிக்கு வயது ஆறு மாதமிருக்கும். இரண்டு பேருமே செம அழகாக இருப்பார்கள். ஊரோ கொண்டாடும் அழகு என் சொல்லலாம்.
'கழுதை கெட்டா குட்டிச் சுவரு' என்ற 'திரு'க்குறளுக்கேற்ப ஏதாவது குட்டிச் சுவரைத் தேடிச் சென்று முதுகு சொரிந்து கொண்டிருப்பதுதான் திருவின் முழுநேரப் பொழுது போக்கு. இப்படி திரு எல்லாக் குட்டிச் சுவர்களையும் தன் சகாக்களோடு க்கிரமித்துக் கொள்வதால் திருமதி எந்தவொரு சுவரும் கிடைக்காமல் விக்கித்து நிற்பாள்.
(திரு ஒரு ஆண் கழுதை, திருமதி ஒரு பெண் கழுதை என்பதை இங்கே சொல்லிவிடுகிறேன்.)
இப்படி எல்லாச் சுவர்களிலும் திரு தன் முதுகு ரேகையை பதித்து விட, அதற்கு மேல் தன் முதுகு ரேகையை அதில் பதிக்க அருவருப்படைந்து அவஸ்தைப் படும் திருமதி. இப்படி திருவின் மேல் திருமதிக்கு விறுவிறுவென வெறுப்பு வளர்ந்து கொண்டே போனது.
இரண்டு வருடங்கள் போனது.அன்று தான் உண்டு கொண்டிருந்த ஒரு வாரப் பத்திரிக்கையில் ஒரு பேப்பரை திருமதிக்கு கொடுத்தான் திரு. ஆனால் திருமதி அதை வாங்கிக் கொள்ளவில்லை. 'வேண்டாம்' என மறுத்தபோது திருமதியின் முகத்தில் வெளிப்பட்டது வெட்கம் கலந்த கோபமா, அல்லது வெறுப்பு கலந்த ஆத்திரமா என திருவால் புரிந்துகொள்ள முடியவில்லை. காரணம் அந்தப் பேப்பரில் இருந்த வார்த்தைகள் 'ஓடிப்போகலாமா?'
தினம் தினம் திருமதி செல்லும் பாதையில் ஒரு ஒற்றை ரோஜாவோடு காத்திருக்கும் திரு. ஒருநாளும் அந்த ரோஜாவை வாங்கிக் கொண்டதில்லை திருமதி. அதுக்காக கவலைப்பட்டுக்கொண்டு கண்ணீர் விட்டதில்லை திரு. என்ன செய்வான்? வேறேன்ன.. ரோஜாவைத் தின்று விடுவான்.
ஆட்டையாம்பட்டியில் அந்த வருடம் கோடைக்காலத்தைத் தாண்டியும் மழை ஒரு எஸ்.எம்.எஸ். கூட அனுப்பவில்லை. விவசாயம் படுத்து விட்டது. கண்மாய் நிர்வாணமாய் கிடந்தது. கள்ளிச் செடிகளும், கருவேலம் மரங்களும்தான் பாக்கியிருந்தன.
'எப்பா பதினைஞ்சு வருசங்கழிச்சு இப்படி பஞ்சம் பல்லைக் காட்டுது. நம்ம ஊரு எல்லைச்சாமிக்கு வர்ற வெள்ளிக்கிழம பொங்க வைச்சு பூசாரி கிட்ட குறி கேட்டுருவோம்!' என பஞ்சாயத்துப் பெரிசு தன் பஞ்ச் தீர்ப்பை வழங்கினார்.
'ஏஏஏய்ய்ய்.. நாஞ் சாமி வந்திருக்கேன்.. ஊருல நல்ல காரியம் ஏதோ தடங்கலாயிடுச்சு. பெரும் தெய்வக் குத்தம் ஆயிடுச்சு!. மழ தண்ணீ வேணுமுன்னா இளங் கழுதைகளுக்கு கண்ணாலம் செஞ்சு வைக்கிறதுதான் ஒரே பரிகாரம். வர்ற பவுர்ண அன்னிக்கு கண்ணாலம் நடக்காட்டி அடுத்த ஏழு வருசங்களுக்கு பஞ்சந்தேன்.. பட்டினிதேன்!' என பூசாரி கூறிய வாக்கு திருமதியை பூச்சாண்டி காட்டியது. காரணம் ஊரிலுள்ள ஒரே இளம் பெண் கழுதை அவள் மட்டும்தான். கல்யாணம் சரி. இதற்காக வெளியூரில் அல்லது வெளிநாட்டிலா அவளுக்கு மாப்பிள்ளை தேடப் போகிறார்கள். திரு மட்டும்தான் ஒரே சாய்ஸ்!
நினைக்க நினைக்க எரிச்சலாக வந்தது. போயும் போயும் அவனுக்கா வாழ்க்கைப் பட வேண்டுமென நினைத்த திருமதி அன்று இரவே ஊரை விட்டு ஓடிப்போக முடிவு செய்தாள். பதுங்கிப் பதுங்கி தெருத்தெருவாக ஒதுங்கி ஒதுங்கி அவள் நழுவிக் கொண்டிருக்கும்போதே பார்த்துவிட்டான் திரு. அவள் ஓட, அவன் துரத்த.. அதற்கு மேல் துரத்த முடியாமல் சோர்ந்து போய் தன் 'சாதகத்தை' ஆரம்பித்துவிட்டான் திரு. ஊரே ஒன்று கூடி விரட்டிப் பிடித்தனர் இருவரையும்!
'ஏலேய்.. இன்னொரு தெய்வக்குத்தம் நடக்கப் பாத்துச்சுலே! கழுதைய்ங்க தப்பிச்சுப் போயிருந்துச்சுன்னா வேற கழுதைய்ங்களுக்க நாம எங்கிட்டுப் போறது? இந்தக் கல்யாண சோடிகளை நம்மூரு எல்லைச் சாமி கோயில்லயே கட்டிப் போட்டு, காவலா ஒரு ஆளையும் போடுங்கவே!' என்று ஊர்ப் பெருசு ஒருவர் கூற திருமதிக்கு தலை சுற்றியது.
'ஒரு பொம்பளையோட மனசு இன்னொரு பொம்பளைக்குத்தான் புரியும். நம்ம மனசைப் புரிஞ்சுக்குற மாதிரி இங்க எவளுமே இல்லையே' என தனக்குள் புலம்பிக் கொண்டிருந்தாள் திருமதி. அவளை சந்தோஷமாக உரசியபடி பல்லைக் காட்டிக் கொண்டிருந்தான் திரு.
கல்யாண நாள் வந்தது. தனக்கு பட்டுவேட்டிச் சட்டை கிடைக்கும், அவளுக்குச் சின்னாளப் பட்டுச் சீலை கிடைக்கும் என நினைத்துக் கொண்டிருந்த திருவின் நினைப்பில் அரை லாரி மண் விழுந்தது. சிக்கனமாக தண்ணீரைச் செலவழித்து குளிப்பாட்டி விட்டனர். ஏழெட்டு பூக்களால் கட்டப்பட்ட மாலைகள் இரண்டு. (மொத்தமே ஏழெட்டு பூக்கள்தாங்க!) திருமதியின் நெற்றியில் பெரிதாக வைக்கப்பட்ட பொட்டு. ஊரே கூடி நின்றது. ஒரு மஞ்சள் கயிறுடன் பூசாரி தயாராக இருந்தார்.
கொஞ்சமாவது வெட்கப்படுவாள் மணப்பெண் என எதிர்பார்த்து ஏமாந்தான் திரு. 'கழுதைக்கு வாக்கப்பட்டா கனைச்சுத் தானே ஆகணும்' என்று தன்னைத் தானே நொந்து கொண்டாள் திருமதி.
நையாண்டி மேளம் கொட்ட, வெற்றிலைக் கறை படிந்த வாயோடு புன்னகைத்து திருவின் சார்பில் திருமதிக்குத் தாலி கட்டினார் பூசாரி. அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பதற்குப் பதிலாக பூசாரியை மிதித்து அவர் வலியால் அலறுவதைப் பார்க்க வேண்டும் என துடித்தாள் திருமதி. வாழ்நாள் சாதனையாளர் விருது வாங்கியது போல் பெருமித்துடன் நின்று கொண்டிருந்தான் திரு.
கல்யாணச் சாப்பாடு என அல்லோகலகல்லோகலப் பட்டுக் கொண்டிருந்தது. திருவுக்கும் திருமதிக்கும் கழுத்தில் போடப்பட்ட அந்த 'மெகா' மாலைதான் கல்யாணச் சாப்பாடு. சாப்பிட்ட மக்களெல்லாம் ஏப்பம் விட்ட வாயோடு மழை வருகிறாதா இல்லையா என வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருக்க, சூரியனால் வியர்வை மழை பொழிந்து கொண்டிருந்தது.
ஒரு வாரமாயிற்று. 'கழுதைக்குத் தெரியுமா காதலோட வாசனை' என திரு வெறுக்குமளவுக்கு சண்டித்தனம் செய்து கொண்டிருந்தாள் திருமதி. 'தாலி கட்டின புருஷனை மதிக்க மாட்டீங்கியே! நீயெல்லாம் ஒரு பொம்பளையா?' கோபமாகக் கத்தினான் திரு.'இது தாலிக் கயிறில்ல.. என் கழுத்துல ஏறுன தூக்குக்கயிறு!' பதிலுக்குக் கத்தினாள் திருமதி. இதுவே வாடிக்கையாயிற்று. 'மழை பெஞ்சிடுச்சுன்னா இந்தத் தாலியைக் கழட்டி வீசிரலாம். இல்லை சாஸ்திரத்துக்கு கல்யாணம் தான் பண்ணியாச்சே. இனிமே இவன் கூட வாழப் பிடிக்கலன்னு டைவர்ஸ் அப்ளை பண்ணலாமா' என்றெல்லாம் யோசித்தாள் திருமதி.
மழை வந்த பாடில்லை. மூன்று மாதங்கள் கழிந்தது. இடைப்பட்ட நாட்களில் திரு-திருமதி ஆதர்ச தம்பதிகளாக மாறிப்போயினர். 'சோடின்னா இதான்யா சோடி' என சாலமன் பாப்பையா பட்டிமன்றம் வைத்தால் தீர்ப்பு சொல்லுமளவுக்கு மாறிப் போயினர்.
மேகம் கருத்தது. ரம்பா, மேனகா, ஊர்வசி என்ற பெயர்கள் கொண்ட மூன்று புயல்கள் அடுத்தடுத்து கரையைக் கடந்தது. கண்மாய் மட்டுமல்ல. ¬ட்டையாம்பட்டியே நிறைந்து போனது. எங்கு பார்த்தாலும் வெள்ளம்.
'ஏஏய்ய்ய்... மழை நிக்கணும்னா அந்தக் கழுத கழுத்துல கெடக்குற தாலியைக் கழட்டணும். தானா நிக்கும் மழ' இடுப்பளவு நீரில் வேசமாக வாக்குச் சொன்னார் பூசாரி.
'நானாடா உங்களைக் கண்ணாலம் பண்ணிவைக்கச் சொன்னேன். யேய் நீங்க நெனைச்சா கட்டுறதுக்கும் தேவையில்லாட்டி எடுக்கறதுக்கும் என் தாலி என்ன சினிமா ஷூட்டிங்குக்கு போட்ட செட்டா! புருசன் உசிரோட இருக்கறப்ப தன் தாலியைக் கழட்டிக் கொடுக்க கலாச்சாரத்தைக் கட்டிக் காக்குற எந்தப் பொம்பளையும் சம்மதிக்க மாட்டா! முட்டாப் பசங்களா உங்களால முடிஞ்சதைப் பண்ணிக்கோங்கடா' உள்ளுக்குள்ளேயே குமுறினாள் திருமதி.
சிறிசு முதல் பெருசு வரை ஊரே திரண்டு தேடியது திருமதியை.
மழை கொட்டிக் கொண்டிருந்தது. ஊரைத் தாண்டி தண்டவாளத்தின் மேல் ஒரு நிம்மதியான பாதுகாப்பான இடத்தைத் தேடி ஓடிக் கொண்டிருந்தனர் அந்தக் காதல் ஜோடிகள். கழுத்தில் மஞ்சள் கயிறோடு திருமதி உங்கள் ஊருக்கும் தஞ்சம் புக வரலாம். வந்தால் இந்த லொள்ளு தர்பார் இதழை அவளிடம் காண்பியுங்கள். சந்தோஷமாகச் சாப்பிடுவாள்.

Saturday, December 10, 2005

கஸ்தூரி மான் - விமர்சனம்




நீண்ட நாள்களுக்குப் பிறகு கதாநாயகியைச் சுற்றி பின்னப்பட்ட கதையோடு வந்துள்ள படம். கல்லூரியில் பணக்கார வீட்டுப் பெண் போல் பந்தாவாக குறும்பு செய்யும் கதாநாயகி உமா. கதாநாயகனின் அருணின் தந்தை பணத்தை எல்லாம் சினிமா தயாரிப்பில் தொலைத்து விட்டு நிற்கிறார். அடுத்த வேளை சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாமல் 'மாடி வீட்டு ஏழை'யாக ஐ.ஏ.எஸ். லட்சியத்துடன் கல்லூரியில் படிக்கிறார் அருணின் நிலை தெரியாமல் அவரை பலமுறை வம்புக்கிழுக்கும் உமா, அவன் நிலை தெரிந்து உதவ ஆரம்பிக்கிறாள். ஆனால் நான்கு வீடுகளில் பார்ட் டைம் நர்சாக வேலை பார்த்து தன் குடும்பத்தைக் காப்பாற்றுகிறாள், தன்னை அடைய ஆசைப்படும் அக்கா புருஷனோடு போராடிக் கொண்டிருக்கிறாள் என உமாவின் பின்னணி கதையில் விரிகிறது. மென்மையான காதல் விரிகிறது. தன் காதலனை ஐ.ஏ.எஸ். ஆக்கப் பாடுபடுகிறாள். ஒரு கட்டத்தில் தன்னை, தன் அக்காவை காப்பாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் அக்கா கணவனை கொலை செய்துவிட்டு சிறைக்குச் செல்கிறாள் உமா. கலெக்டராக திரும்பும் அருண், உமாவை வெளியே எடுக்க முயற்சிக்க மறுத்து விட்டு தண்டனை அனுபவிக்கிறாள்.
நாயகியின் உதவியை ஏற்றுக்கொள்ளும் நாயகன், தன் குற்றத்திற்காக முழுமையாக தண்டனையை அனுபவிக்க நினைக்கும் கதாநாயகி என்ற விஷயங்கள் ப்ளஸ்!
காதல் காட்சிகளாகட்டும், சண்டைக் காட்சிகளாகட்டும் - மென்மை இழையோடுகிறது. ஆனால் வசனங்களில் கூர்மை தெரிகிறது. ஒரு சில காட்சிகளைத் தவிர வசனகர்த்தாவாக அறிமுகமாகியுள்ள ஜெயமோகனைப் பாராட்டி வரவேற்கலாம்.
இப்ப வர்ற எந்தப் பாட்டைக் கேட்டாலும் அது காதுகளைக் 'குத்து'து. இந்தப் படத்துல இளையராஜா இசையாமே. நல்ல பாடல்கள் கேட்கலாமுன்னு நம்பிப் போனா பெரிய ஏமாற்றம்.
குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால மழை தமிழ்நாட்டுல கொட்டோ கொட்டுன்னு கொட்டுற மாதிரி, மீரா ஜாஸ்மின் (உமா) நிறைந்த நடிப்பால திரையில நவரசத்தைக் கொட்டியிருக்காங்க! இன்னொரு சாவித்திரின்னு வாய் வலிக்கச் சொல்லிப் பாராட்டலாம்.
வெட்டிச் சவுடால், புஜ பலம் காட்டும் கதாநாயகர்கள் மத்தியில் பிரசன்னா (அருண்) ஒரு பட்டாம்பூச்சி போல நம் மனதில் வந்து அமர்கிறார். 'இவன் நம்மளை மாதிரிதான்பா' என ஒரு நெருக்கம் ஏற்பத்துகிறது அவரின் கதாபாத்திரம்.
புது மலையாள வில்லி லீலாவின் நடிப்பு க்ளாஸ். பாதராக வரும் நடிகர் திரையில் தோன்றும் போதெல்லாம் க்ளாப்ஸ்!
வருடக்கணக்கில் பொறுமையாக மெகா சீரியல் பார்க்கும் மக்களால், இந்தப் படத்தை இரண்டரை மணி நேரம் பொறுமையாக பார்க்க முடியுமா என்றால் சந்தேகம்தான். தெளிவான திரைக்கதை ஓட்டத்துடன் ஒரு படம் பார்த்து எவ்வளவு நாளாச்சு? என ஏங்கும் ரசிகர்களுக்கு ட்ரீட் தர வந்துள்ள படம் என மனதார பாராட்டலாம். ஆனால் 'திரைக்கதையில் வேகம்' என்ற ஃபார்முலா வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கும் காலத்தில் கஸ்தூரிமானால் ஈடு கொடுக்க முடியாது.

Monday, December 05, 2005

கோயிஞ்சாமியின் காதல் கடிதங்கள்!

பாறையில் குபுக்கென்று பால் கசிந்தது போல... பாலைவனத்தில் பொசுக்கென்று மழை கொட்டியது போல... பஞ்சு மிட்டாயில் தீப்பிடித்தது போல... தீக்குழம்பில் பூப்பூத்தது போல... கோயிஞ்சாமி என்ற அந்த கல்யாணமாகாத முப்பத்தேழு வயது இளைஞனுக்குள் குபீர் என காதல் வெடித்தது முதன் முறையாக! யாரவள்?!

அன்று அதிகாலை 11 மணிக்கு(!) அந்த பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த போது, அவளின், கோயிஞ்சாமியின் கண்ணும் கண்ணும் நோக்கியா! காதல் நோய் தாக்கியா!

கோயிஞ்சாமியின் இதயத்துக்குள் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, அது அவள் சென்ற திசையில் நகர்ந்து, காதல் மழையாகப் பொழியத் தொடங்கியிருந்தது.

எப்பாடுபட்டாவது தன்னுள் குமுறிக் கொண்டிருக்கும் காதலை அவளிடம் கொட்டி விட வேண்டுமென தீர்மானித்த கோயிஞ்சாமி, பழைய ஃபார்முலாவைப் பின்பற்றலாமென ஒரு முடிவுக்கு வந்தார். வேறேன்ன.. காதல் கடிதம்தான்!

தன் நண்பரான நாட்டு மருந்து வைத்தியர் ஒருவரிடம் சென்று, ஒரு காதல் கடிதம் எழுதித் தருமாறு கேட்டார். 'உனக்காக இது கூட பண்ண மாட்டேனா' எனப் பொங்கி வந்த பாசத்துடன் ஒரு கடித்தத்தை லேகியம் போல பதமாகக் கிண்டிக் கொடுத்தார் அந்த வைத்தியர் வைத்தி.

"ஆரோக்கியமுள்ள ஆருயிரே,
உன் அழகு 'மிளகு'க் கண்கள் தாக்கியதால், 'சுக்கு' போல் வறண்டு கிடந்த என் மனம் இப்போது 'இஞ்சி' போல் ஈரமாகி விட்டது.
வாசமுள்ள 'நன்னாரி'யே.. என் இதயம் நீ அறிவாயா? உன் இதயத் தொட்டியில் என் 'வெட்டி வேர்கள்' பரவ இடம் கொடுப்பாயா?
லேகியம் போல் மென்மையானவளே..
வாயு, பித்தம், அஜீரணம், கபம், இருமல் போலல்ல காதல்!
காதல் ஒரு விநோத நோய்! அதைத் குணப்படுத்தும் கசாயமும் காதலே!
நீ ஒரு ஜாடை காட்டினால் போதும், எத்தனை மண்டலத்திற்கு வேண்டுமென்றாலும் உனக்கென 'பத்தியம்' இருப்பேன் காதல் பைத்தியமாய்!
'கடுக்காய்' கொடுத்து விடாதே!
இப்படிக்கு
சஞ்சீவி மூலிகை உன்னை விரும்பும்
சிரஞ்சீவி கோயிஞ்சாமி"

அந்தக் கடிதத்தை பத்திரமாக வாங்கி வைத்துக் கொண்டார் கோயிஞ்சாமி. இன்னும் வேறு மாதிரி முயற்சி பண்ணலாமே என உள் மனதின் ஓரத்தில் ஒரு பட்சி கூவியது. தன் இன்னொரு நண்பரான கமல்நாயகத்திடம் உதவி கேட்டார். தீவிர கமல் பித்தரான கமல்நாயகமும் கடிதமொன்றை எழுதித் தந்தார்.

"கண்மணி அன்போடு காதலன்
கோயிஞ்சாமி எழுதும் கடிதமே!
காதல்ங்கறதை ஒரு நிகழ்வுன்னும் சொல்லலாம்.
இதயத்தோட வலி சார்ந்த சுகானுபவம்னும் சொல்லலாம்.
காமத்தின் முன் பரிமாண பிம்பங்கள்னும் சொல்லலாம்.
காதல்னும் சொல்லலாம்!
காதல் வந்தா உடனே சொல்லிடணுங்கிறது அவசியம் கிடையாது.
அதுக்காக காதலை சொல்லாம உள்ளேயே பொத்தி பொத்தி வைக்கிறது அநாவசியம்னு யாராவது தன் எண்ணங்களைச் சொன்னாங்கன்னா, அதை நான் கைதட்டி வரவேற்பேன்.
உதடு உடம்புல ஒரு உறுப்பா இருக்கறதோட நிர்பந்தம் முத்தம் கொடுக்கறதுக்காக மட்டும்தான்னு நினைக்கிறவன் முட்டாள். காதலிக்கிறவனுக்கு அப்படித்தான் தோணும். அதுக்காக அவனை முட்டாள்னு சொல்லிட முடியாது.
வெளிப்படுத்தறதுக்கு என்னென்னமோ விஷயங்கள் இருக்கறப்போ நான் என் காதலை மட்டும் வெளிப்படுத்த அவசரப்படுறது நான் என் மேல் கொண்ட சுயநலம் கொண்ட சுய பச்சாதாபமாய் உனக்குத் தோணலாம்.
னா அதே சுயநலத்தோட நீயும் உணர்வுப்பூர்வமா ராய்ந்து பார்த்தா என்னோட தப்புக்கள் தவறிக்கூட தப்புக்களாத் தெரியாது. காதலாத்தான் தெரியும்.
பதிலை சொல்லு. உடனே சொல்லணும்னு அவசியமில்லை.
னா அது தப்பில்லை.
ப்ரெஞ்ச் முத்தங்களுடன்
கோயிஞ்சாமி"

இந்தக் கடிதத்தையும் வாங்கி வைத்துக் கொண்டார். ஆனா கொஞ்சம் அதிகமாவே தலை சுத்துறாப்ல தோணுச்சு கோயிஞ்சாமிக்கு. எதுக்கு வம்புன்னு தன்னோட இன்னொரு நண்பரான சாப்ட்வேர் இன்ஜினியர் விப்ரோதாசனை கடிதம் எழுதித் தருமாறு உதவி கேட்டார் கோயிஞ்சாமி. அவரும் மறுக்காமல் எழுதிக் கொடுத்தார்.

"என் Heart என்னும் Hard diskல் பதிந்த மென்பொருள் தேவதையே!
உன் பார்வை வைரஸ்கள் தாக்கியதில் என் ப்பரேட்டிங் சிஸ்டமே நிலை குலைந்து விட்டது.
என் இமெயில் ஐடி தானாக பாஸ்வேர்டை உன் பெயராக மாற்றிக் கொண்டது.
என் கீபோர்டில் என்ன அடித்தாலும் உன் பெயர் மட்டுமே வருகிறது.
என் மௌஸ் Cursor உன் நெற்றிப் பொட்டாக மாற தவம் கிடக்கிறது.
டாட்நெட் தேவதையே!
ஜாவா கண்மணியே!
ரக்கிள் அழ்கியே!
மெயின்ஃப்ரேம் மயிலே!
உன் இதயத்தில் எனக்கென '143'MB இடம் ஒதுக்குவாயா?
இந்தக் கடிதத்தை தேவையில்லாத File என நினைத்து Recycle Binக்கு அனுப்பிவிடாதே!
இப்படிக்கு
காதல் நோயால் Boot ஆகாமல் தவிக்கும்
கோயிஞ்சாமி"


நல்லாத்தான் இருக்கு. ஆனா அவளுக்கு புரியாமப் போயிடக்கூடாதேஒ என பயந்த கோயிஞ்சாமி தன் இன்னொரு நண்பரான கிரிக்கெட் வீரர் பைஸ் பாண்டியனிடம் உதவி கேட்டார். அவர் எழுதித் தந்த கடிதம்..

"அன்புள்ள ஆஃப் சைட் ஸ்டெம்பே!
உன்னால் கவரப்பட்ட லெக் சைட் ஸ்டெம்ப் எழுதுவது.
நமக்கிடைப்பட்ட மிடில் ஸ்டெம்ப் காதல்தானா என உறுதிபடுத்தவே இந்தக் கடிதம்.
உன் பார்வை போட்ட பவுன்சரில் அவுட் ஆகி விட்டது என் மன விக்கெட்.
மெல்போர்ன் மைதானம் போன்ற உன் பெரிய மனதில் காதலனாய் நான் விளையாட அனுமதிப்பாயா? இல்லை பெவிலினியனிலேயே அமர வைத்து அழ வைப்பாயா?
டாஸ் போட்டுப் பார்த்து முடிவு செய்ய இது மேட்ச் அல்ல.. வாழ்க்கை!
பேட்டிங்கோ, பவுலிங்கோ உன்னிடம் தோற்பது கூட எனக்குச் சுகம். ஆனால் காதலில் தோற்க நான் தயாராக இல்லை.
என் அப்பா 'அம்பயர்' அவுட் என கை தூக்கினாலும், என் குடும்ப தேர்வுக் கமிட்டி உறுப்பினர்கள் உன்னை வேண்டாம் என்று ஒதுக்கினாலும், என் வாழ்க்கை கேப்டன் நீதான். என்னை உன் 12th மேன் ஆக்கிவிடாதே!
உன் மனத்தின் பிட்ச் ரிப்போர்ட் எதிர்பார்க்கும்
கோயிஞ்சாமி"

'அட.. இதுவும் நல்லாத்தான் இருக்கு. ஆனா அவளுக்கு கிரிக்கெட் பிடிக்காம புட்பால் புடிச்சிருந்தா மேட்டர் ஊத்திக்குமே' என பயந்த கோயிஞ்சாமி தானே ஓர் காதல் கடிதம் எழுத ஆரம்பித்தார். (கோயிஞ்சாமிக்கு தமிழ் எழுதுவதில் தடுமாற்றம் என்ற சிதம்பர ரகசியத்தை இங்கே சொல்லிக் கொள்கிறேன்.)

"எண் அம்பு காடளியே!
கேஇந்தசமி எலுடிக் கொல்வது
நா ஒன்னெ பாட்தேன். பிட்சிர்க்கு. அடிகமா பிட்சிர்க்கு! ரெம்ப்ப பிட்சிர்க்கு.
அதான் காடளை சொழ்ழ இண்ட லெத்தரை எல்துரேன்.
மநிதர் உநர்ண்டு கொல்ல இடு மநிதக் காடள் அள்ள!
அடையும் டாண்டி புநிடமாணடு!
காடளுடன்
கேஇந்தசமி"

(அப்புறம் என்ன நடத்துன்னு கேக்கறீங்களா.. காதல்ங்கறது இரண்டு மனசு சம்பந்தப்பட்ட விஷயம். அதுல மூணாவது ஆளா நாம ஏன் மூக்கை நுழைக்கணும். அது நாகரிகம் இல்லை. ஸோ அதை விட்டுருவோம். ஆமா.. சிநேகா நாகரவியை கல்யாணம் பண்ணிக்கப்போறாங்களா இல்லையா.. உங்களுக்குத் தெரியுமா?!)

(லொள்ளு தர்பார் - dec 4-2006)