தமிழ் முகில்

Monday, December 05, 2005

கோயிஞ்சாமியின் காதல் கடிதங்கள்!

பாறையில் குபுக்கென்று பால் கசிந்தது போல... பாலைவனத்தில் பொசுக்கென்று மழை கொட்டியது போல... பஞ்சு மிட்டாயில் தீப்பிடித்தது போல... தீக்குழம்பில் பூப்பூத்தது போல... கோயிஞ்சாமி என்ற அந்த கல்யாணமாகாத முப்பத்தேழு வயது இளைஞனுக்குள் குபீர் என காதல் வெடித்தது முதன் முறையாக! யாரவள்?!

அன்று அதிகாலை 11 மணிக்கு(!) அந்த பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த போது, அவளின், கோயிஞ்சாமியின் கண்ணும் கண்ணும் நோக்கியா! காதல் நோய் தாக்கியா!

கோயிஞ்சாமியின் இதயத்துக்குள் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, அது அவள் சென்ற திசையில் நகர்ந்து, காதல் மழையாகப் பொழியத் தொடங்கியிருந்தது.

எப்பாடுபட்டாவது தன்னுள் குமுறிக் கொண்டிருக்கும் காதலை அவளிடம் கொட்டி விட வேண்டுமென தீர்மானித்த கோயிஞ்சாமி, பழைய ஃபார்முலாவைப் பின்பற்றலாமென ஒரு முடிவுக்கு வந்தார். வேறேன்ன.. காதல் கடிதம்தான்!

தன் நண்பரான நாட்டு மருந்து வைத்தியர் ஒருவரிடம் சென்று, ஒரு காதல் கடிதம் எழுதித் தருமாறு கேட்டார். 'உனக்காக இது கூட பண்ண மாட்டேனா' எனப் பொங்கி வந்த பாசத்துடன் ஒரு கடித்தத்தை லேகியம் போல பதமாகக் கிண்டிக் கொடுத்தார் அந்த வைத்தியர் வைத்தி.

"ஆரோக்கியமுள்ள ஆருயிரே,
உன் அழகு 'மிளகு'க் கண்கள் தாக்கியதால், 'சுக்கு' போல் வறண்டு கிடந்த என் மனம் இப்போது 'இஞ்சி' போல் ஈரமாகி விட்டது.
வாசமுள்ள 'நன்னாரி'யே.. என் இதயம் நீ அறிவாயா? உன் இதயத் தொட்டியில் என் 'வெட்டி வேர்கள்' பரவ இடம் கொடுப்பாயா?
லேகியம் போல் மென்மையானவளே..
வாயு, பித்தம், அஜீரணம், கபம், இருமல் போலல்ல காதல்!
காதல் ஒரு விநோத நோய்! அதைத் குணப்படுத்தும் கசாயமும் காதலே!
நீ ஒரு ஜாடை காட்டினால் போதும், எத்தனை மண்டலத்திற்கு வேண்டுமென்றாலும் உனக்கென 'பத்தியம்' இருப்பேன் காதல் பைத்தியமாய்!
'கடுக்காய்' கொடுத்து விடாதே!
இப்படிக்கு
சஞ்சீவி மூலிகை உன்னை விரும்பும்
சிரஞ்சீவி கோயிஞ்சாமி"

அந்தக் கடிதத்தை பத்திரமாக வாங்கி வைத்துக் கொண்டார் கோயிஞ்சாமி. இன்னும் வேறு மாதிரி முயற்சி பண்ணலாமே என உள் மனதின் ஓரத்தில் ஒரு பட்சி கூவியது. தன் இன்னொரு நண்பரான கமல்நாயகத்திடம் உதவி கேட்டார். தீவிர கமல் பித்தரான கமல்நாயகமும் கடிதமொன்றை எழுதித் தந்தார்.

"கண்மணி அன்போடு காதலன்
கோயிஞ்சாமி எழுதும் கடிதமே!
காதல்ங்கறதை ஒரு நிகழ்வுன்னும் சொல்லலாம்.
இதயத்தோட வலி சார்ந்த சுகானுபவம்னும் சொல்லலாம்.
காமத்தின் முன் பரிமாண பிம்பங்கள்னும் சொல்லலாம்.
காதல்னும் சொல்லலாம்!
காதல் வந்தா உடனே சொல்லிடணுங்கிறது அவசியம் கிடையாது.
அதுக்காக காதலை சொல்லாம உள்ளேயே பொத்தி பொத்தி வைக்கிறது அநாவசியம்னு யாராவது தன் எண்ணங்களைச் சொன்னாங்கன்னா, அதை நான் கைதட்டி வரவேற்பேன்.
உதடு உடம்புல ஒரு உறுப்பா இருக்கறதோட நிர்பந்தம் முத்தம் கொடுக்கறதுக்காக மட்டும்தான்னு நினைக்கிறவன் முட்டாள். காதலிக்கிறவனுக்கு அப்படித்தான் தோணும். அதுக்காக அவனை முட்டாள்னு சொல்லிட முடியாது.
வெளிப்படுத்தறதுக்கு என்னென்னமோ விஷயங்கள் இருக்கறப்போ நான் என் காதலை மட்டும் வெளிப்படுத்த அவசரப்படுறது நான் என் மேல் கொண்ட சுயநலம் கொண்ட சுய பச்சாதாபமாய் உனக்குத் தோணலாம்.
னா அதே சுயநலத்தோட நீயும் உணர்வுப்பூர்வமா ராய்ந்து பார்த்தா என்னோட தப்புக்கள் தவறிக்கூட தப்புக்களாத் தெரியாது. காதலாத்தான் தெரியும்.
பதிலை சொல்லு. உடனே சொல்லணும்னு அவசியமில்லை.
னா அது தப்பில்லை.
ப்ரெஞ்ச் முத்தங்களுடன்
கோயிஞ்சாமி"

இந்தக் கடிதத்தையும் வாங்கி வைத்துக் கொண்டார். ஆனா கொஞ்சம் அதிகமாவே தலை சுத்துறாப்ல தோணுச்சு கோயிஞ்சாமிக்கு. எதுக்கு வம்புன்னு தன்னோட இன்னொரு நண்பரான சாப்ட்வேர் இன்ஜினியர் விப்ரோதாசனை கடிதம் எழுதித் தருமாறு உதவி கேட்டார் கோயிஞ்சாமி. அவரும் மறுக்காமல் எழுதிக் கொடுத்தார்.

"என் Heart என்னும் Hard diskல் பதிந்த மென்பொருள் தேவதையே!
உன் பார்வை வைரஸ்கள் தாக்கியதில் என் ப்பரேட்டிங் சிஸ்டமே நிலை குலைந்து விட்டது.
என் இமெயில் ஐடி தானாக பாஸ்வேர்டை உன் பெயராக மாற்றிக் கொண்டது.
என் கீபோர்டில் என்ன அடித்தாலும் உன் பெயர் மட்டுமே வருகிறது.
என் மௌஸ் Cursor உன் நெற்றிப் பொட்டாக மாற தவம் கிடக்கிறது.
டாட்நெட் தேவதையே!
ஜாவா கண்மணியே!
ரக்கிள் அழ்கியே!
மெயின்ஃப்ரேம் மயிலே!
உன் இதயத்தில் எனக்கென '143'MB இடம் ஒதுக்குவாயா?
இந்தக் கடிதத்தை தேவையில்லாத File என நினைத்து Recycle Binக்கு அனுப்பிவிடாதே!
இப்படிக்கு
காதல் நோயால் Boot ஆகாமல் தவிக்கும்
கோயிஞ்சாமி"


நல்லாத்தான் இருக்கு. ஆனா அவளுக்கு புரியாமப் போயிடக்கூடாதேஒ என பயந்த கோயிஞ்சாமி தன் இன்னொரு நண்பரான கிரிக்கெட் வீரர் பைஸ் பாண்டியனிடம் உதவி கேட்டார். அவர் எழுதித் தந்த கடிதம்..

"அன்புள்ள ஆஃப் சைட் ஸ்டெம்பே!
உன்னால் கவரப்பட்ட லெக் சைட் ஸ்டெம்ப் எழுதுவது.
நமக்கிடைப்பட்ட மிடில் ஸ்டெம்ப் காதல்தானா என உறுதிபடுத்தவே இந்தக் கடிதம்.
உன் பார்வை போட்ட பவுன்சரில் அவுட் ஆகி விட்டது என் மன விக்கெட்.
மெல்போர்ன் மைதானம் போன்ற உன் பெரிய மனதில் காதலனாய் நான் விளையாட அனுமதிப்பாயா? இல்லை பெவிலினியனிலேயே அமர வைத்து அழ வைப்பாயா?
டாஸ் போட்டுப் பார்த்து முடிவு செய்ய இது மேட்ச் அல்ல.. வாழ்க்கை!
பேட்டிங்கோ, பவுலிங்கோ உன்னிடம் தோற்பது கூட எனக்குச் சுகம். ஆனால் காதலில் தோற்க நான் தயாராக இல்லை.
என் அப்பா 'அம்பயர்' அவுட் என கை தூக்கினாலும், என் குடும்ப தேர்வுக் கமிட்டி உறுப்பினர்கள் உன்னை வேண்டாம் என்று ஒதுக்கினாலும், என் வாழ்க்கை கேப்டன் நீதான். என்னை உன் 12th மேன் ஆக்கிவிடாதே!
உன் மனத்தின் பிட்ச் ரிப்போர்ட் எதிர்பார்க்கும்
கோயிஞ்சாமி"

'அட.. இதுவும் நல்லாத்தான் இருக்கு. ஆனா அவளுக்கு கிரிக்கெட் பிடிக்காம புட்பால் புடிச்சிருந்தா மேட்டர் ஊத்திக்குமே' என பயந்த கோயிஞ்சாமி தானே ஓர் காதல் கடிதம் எழுத ஆரம்பித்தார். (கோயிஞ்சாமிக்கு தமிழ் எழுதுவதில் தடுமாற்றம் என்ற சிதம்பர ரகசியத்தை இங்கே சொல்லிக் கொள்கிறேன்.)

"எண் அம்பு காடளியே!
கேஇந்தசமி எலுடிக் கொல்வது
நா ஒன்னெ பாட்தேன். பிட்சிர்க்கு. அடிகமா பிட்சிர்க்கு! ரெம்ப்ப பிட்சிர்க்கு.
அதான் காடளை சொழ்ழ இண்ட லெத்தரை எல்துரேன்.
மநிதர் உநர்ண்டு கொல்ல இடு மநிதக் காடள் அள்ள!
அடையும் டாண்டி புநிடமாணடு!
காடளுடன்
கேஇந்தசமி"

(அப்புறம் என்ன நடத்துன்னு கேக்கறீங்களா.. காதல்ங்கறது இரண்டு மனசு சம்பந்தப்பட்ட விஷயம். அதுல மூணாவது ஆளா நாம ஏன் மூக்கை நுழைக்கணும். அது நாகரிகம் இல்லை. ஸோ அதை விட்டுருவோம். ஆமா.. சிநேகா நாகரவியை கல்யாணம் பண்ணிக்கப்போறாங்களா இல்லையா.. உங்களுக்குத் தெரியுமா?!)

(லொள்ளு தர்பார் - dec 4-2006)

2 Comments:

  • Sofware Engg Letter chumma nachchnu irrukku

    By Anonymous Anonymous, at Monday, December 05, 2005 5:28:00 pm  

  • மத்த எல்லா கடிதத்தையும்..

    நம்ம கோயிஞ்சாமி கடிதம் தூக்கி சாப்பிட்டிருச்சு... கடிதம் மட்டுமல்ல தமிழ் முதற்கொண்டு.. :-)))))

    அந்த கடிதம் நல்ல கற்பனை..

    -
    செந்தில்/Senthil

    By Blogger யாத்ரீகன், at Monday, December 05, 2005 10:08:00 pm  

Post a Comment

<< Home