தமிழ் முகில்

Wednesday, November 09, 2005

பஜ்ஜி-ஒரு லட்சிய வீரனின் கதை!

கோடம்பாக்கத்தில் எட்டுக்கு எட்டு அடி அளவுள்ள ஒரு பேச்சுலர் ரூம்.விரல்களின் இடுக்கில் கசிகின்ற புகையோடு மணிரத்னம், ஷங்கர், செல்வராகவன்... ஆக ஆசைப்பட்டு சொந்த ஊரை விட்டு ஓடி வந்த வருங்கால டைரக்டர்கள் மூவர். பெயரென்ன கேக்கறீங்களா.. ..ம், என்ன வைக்கலாம்! முதலில் சொன்ன பெயர்களே இருந்துட்டுப் போகட்டுமே! அவங்க என்ன கோச்சுக்கவா போறாங்க! செல்லுலாய்டு கனவுகளோடு சீரியஸாக கதை விவாதம் நடக்கிறது. நம் காதை கொஞ்சம் உள்ளே அனுப்பினோம் கதை கேட்க! கேட்டதிலிருந்து...
மணி : இது கதை. சின்னக் கதை. பழசுதான். ஆனா புதுசு. சொல்ற விதம் புதுசு. ஷங்கர் : சொல்லு. பழைய இட்லியை, உப்புமாவா மாத்துறதில்லையா! அது இட்லிதான். ஆனா இப்ப உப்புமா! அப்படித்தான் கதையும்!
செல்வா : சதைகள்ல உணர்ச்சியைக் காண்பிச்சுக் கவுத்துட்டா மக்கள் அநாவசியமா கதையைத் தேட மாட்டாங்க! நீ கதையோட ஒன் லைனைச் சொல்லு!மணி : கேட்கணும். கவனமாக் கேட்கணும். ஒரு கிழவி. வயசானவ!ஷங்கர் : டேய், வயசனாத்தாண்டா அவ கிழவி. மேல போ!
மணி : சுடுறா!
ஷங்கர் : தீவிரவாதிகளை காஷ்மீர் பார்டர்ல போயி தனி ஆளா நின்னு காலி பண்றாளா! செம ஸ்டோ ரிடா மச்சான்!
மணி : தேவை. பொறுமை தேவை. புரியும். கதை. இன்னும் சொல்லல!செல்வா : டேய் படுத்தாதடா. வார்த்தைகளை இன்ஸ்டால்மென்ட்ல பேசாம தொடர்ந்து பேசுடா!மணி : கிழவி இருக்கா. தொழில் வடை சுடுறது. எதிரி ஒருத்தன். ஒரே ஒருத்தன். பேரு காக்கா. நிஜக் காக்கா. வலைவிரிக்கிறான் தினமும் வடைக்கு. கிடைக்குது. ஒருநாள் கிடைக்குது. கொண்டு போயிடுறான் வடையை தன்னோட மரக்கிளைக்கு. வடை. ஆசை. நிறைவேறுன சந்தோஷம். ஆனா நிறைவேறல. வருது. பிரச்னை வருது. நரியா பிரச்னை வருது. காக்காவை நரி மயக்குது. வசியம் பண்ணுது. புத்தியால. வார்த்தைகளால. சொல்லுது. பாடச் சொல்லுது. பாட்டு. காக்கா வாய் தொறக்குது. வடை கீழே விழுது. எடுக்குது நரி. முடியது கதை. இது கதையில்ல. முழு கதையில்ல. செதுக்கணும். மாத்தணும். நிறைய்ய உழைக்கணும்.
ஷங்கர் : நல்ல தீம்டா! இதுதான் கரு. ஆனா இதை வைச்சு நாம உருவாக்குற கதையால எல்லாரும் மிரளணும். செல்வா : முதல்ல பாட்டி கேரக்டரைத் தூக்கணும். பாட்டியை மெயினாப் போட்டா நாம மூணு பேரும்தான் படத்தை மாத்தி மாத்தி பாக்க வேண்டியது வரும். அதனால பாட்டி ரோலை உருவிட்டு, அங்க ஒரு இளம் பெண் கேரக்டரை சொருகிரலாம்.
ஷங்கர் : அப்ப அந்த கேரக்டருக்கு நமீதா ஓ.கே. நமீதா ஸ்கீரின்ல வடை சுட்டாப் போதும். பிரம்மாண்டமா இருக்கும்.
செல்வா : வடை அப்படிங்கிற கேரக்டர் கூட ரொம்ப நாள் இருந்ததால ஊசிப்போச்சு. அதனால வடையை மாத்துறோம்.
ஷங்கர் : நேற்றைக்கு வடைன்னா, இன்னிக்கு வடைகறி!
செல்வா : அப்பா ராசா, எண்ணையில பொரிக்கறாப்ல ஏதாவது சொல்லுடா!மணி : மாடர்ன் நமீதா சுடுறா! டெல்லி அப்பளம் சுடுறா!
ஷங்கர் : டேய் இது உனக்கே ஓவராத் தெரியல! அம்மாம் பெரிய டெல்லி அப்பளத்தை சிங்கிள் காக்கா எப்படிடா தூக்கிட்டுப் போகமுடியும்? அநியாயமாப் பேசாதடா! ஏதாவது சின்னதா மாடர்னா சொல்லு.
செல்வா : ஆங். அப்ப பிரெட் வைச்சுக்கலாம். நம்மாளுங்கதான் சாஃப்டா எது கிடைச்சாலும் உடனே கரைச்ச கடலை மாவுல பொரட்டி எடுத்து, கொதிக்கிற எண்ணையில நீச்சலடிக்க வைச்சி, வாய்க்குள்ள தள்ளிடுறாங்களே! பிரெட் பஜ்ஜின்னு வைச்சுக்கலாம்.
மணி : இடம் முக்கியம். நமீதா இருக்குற இடம் முக்கியம்.
செல்வா : ஏதாவது தெரு முனையில கடையைக் காண்பிக்க வேண்டியதுதான!
ஷங்கர் : இல்ல, இதுல பிரம்மாண்டம் முக்கியம். அதனால தாஜ் கோரமண்டல் பைவ் ஸ்டார் ஹோட்டல்.. வாசலுக்கு எதிர்த்தாப்ல கடையை வைச்சுக்கலாம்.
செல்வா : அப்ப, காக்கா, தாஜ் ஹோட்டலோட மொட்டை மாடியில குடியிருக்குது. பணக்காரக் காக்கா! எப்படி!
ஷங்கர் : பணக்காரக் காக்கா ஹார்ட் பேஷண்ட். எண்ணெய் பலகாரங்கள் சாப்பிடக் கூடாது. அதனால பஜ்ஜி மேல காக்காக்கு ஒரு கண்ணு.
மணி : போதாது. சென்டிமென்ட் போதாது. வேணும். வேற ப்ளாஷ்பேக்!செல்வா : அப்ப காக்காவோட அம்மா கதை ஒண்ணை ப்ளாஷ்பேக்ல புகுத்திரலாம். இதே மாதிரி நமீதாவோட அம்மா கடையில் வடையத் திருடப் போன அம்மா காக்கா, ஸ்லிப் ஆகி எண்ணெய்ச் சட்டியில விழுந்து செத்துப் போயிருது. அதைத் தன்னோட ரெண்டு கண்ணால பாக்குற மகன் காக்கா மனசு முழுக்க வெறியோட அலையுது.
ஷங்கர் : நெஞ்சை நக்குது!மணி : காக்கா.. பஜ்ஜி.. காக்கா.. பஜ்ஜி.. காட்டுறோம் ரெண்டையும் மாத்தி மாத்தி!
ஷங்கர் : முந்நூறு அடி உயரத்துல இருந்து காக்கா, நமீதா கடையைப் பாத்து பறந்து வர்றதை காக்கா ஆங்கிள்ல காட்டுறோம். இதுக்கு ஹெலிகாப்டரை யூஸ் பண்ணி ஷாட் வைச்சுக்கலாம்.
மணி : வேணும். இங்க பரபரப்பு வேணும். மேல இருந்து காக்கா பறந்து வர்றதுக்குள்ள இருந்த ஒரு பிரெட் பஜ்ஜியும் ஆயிடுது காலி. ஒருத்தன் வாங்கிட்டுப் போயிடுறான்.
செல்வா : தூள்மா! அப்படியே பரபரப்போட இங்க கொஞ்சம் கிளுகிளுப்பையும் தூவிரலாம். இவ்வளவு தூரம் பறந்து வந்தது வேஸ்ட் ஆயிடக் கூடாதேன்னு காக்கா வந்த வேகத்துல நமீதாக்கு லிப் டூ லிப் ஒரு கிஸ் அடிச்சுட்டுப் போயிடுது! எப்படி!
மணி : கிஸ்.. செம கிஸ்! கிக்.. செம கிக்!
ஷங்கர் : ஆனா காக்கா கதாநாயகிக்கு கிஸ் அடிச்சா மக்கள் ஒத்துக்க மாட்டாங்களே! அதுபோக நம்ம கதையில இன்னும் கதாநாயகன் கேரக்டரையே கொண்டு வரலையே!
செல்வா : காக்காதான் கதாநாயகன். வேறேந்த புது கேரக்டரைக் கொண்டு வந்தாலும் வலுக்கட்டாயமா திணிச்ச மாதிரி ஆயிரும். ஆங்.. ஐடியா! கேரக்டருக்கு ஏத்தாப்ல எப்படி வேணும்னாலும் உடம்பை மாத்திக்குற கமல், விக்ரம், சூர்யா இவங்க யாரையாச்சும் காக்கா கெட்-அப்ல நடிக்க வைச்சுரலாம்!
ஷங்கர் : செம ஐடியா மச்சி! கிஸ் அடிச்சுட்டு வந்த கிக்ல காக்கா ஹீரோ நமீதாகூட ஒரு கனவு டூயட் பாடுறாரு!
மணி : சூப்பர். அடுத்த அட்டெம்ப்ட். இது வேற பஜ்ஜி. ஜெயிச்சிடுச்சி! பஜ்ஜி இப்ப காக்கா வாயில! கண்ணீர் நமீதா கண்ணுல!
ஷங்கர் : ஓ.கே. இப்ப வில்லன் கேரக்டர் நரியைக் கொண்டு வர்றோம். ஆனா நரி தாஜ் கோரமண்டல் வாசல்ல நின்னுக்கிட்டு, அவ்ளோ உயரத்துல இருக்குற காக்காகிட்ட 'பஜ்ஜியைத் தா! தா!'ன்னு கேட்டு வாங்க முடியாதே! வேணும்னா ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பலாம்.
மணி : வேண்டாம். நரி வேண்டாம். தேவை பவர்ஃபுல் வில்லன்! உயரமான வில்லன். வைச்சுக்கலாம் டினோசரை!
செல்வா : சூப்பர். டினோசர் வில்லன் காக்காவோட பஜ்ஜிக்கும், கூடவே நமீதா கடையில இருக்குற பஜ்ஜிகளுக்கும் ஆசைப்படுறான். ஹீரோ காக்கா, ஹீரோயின் நமீதாவையும், தன்னோட லட்சிய பஜ்ஜியையும் எப்படி காப்பாத்தறான்னு சொல்லுறோம்.
ஷங்கர் : ஹீரோ காக்காகிட்ட பேசி, மயக்கி, அதை பாட்டு ஒண்ணு பாடச் சொல்லி கெஞ்சுது டினோசர். அப்ப காக்கா ஒரு பாட்டு பாடுது. அது குத்துப்பாட்டு. காக்காவோட சிந்தனையில அந்த சிங்கிள் பாட்டுக்கு நயன்தாரா டான்ஸ் ஆடுற மாதிரி வைச்சுரலாம்.
மணி : முடியுது பாட்டு. கீழே விழுகுது பஜ்ஜி.
செல்வா : முந்நூறு அடி உயரத்துல இருந்து விழுற பஜ்ஜியை கேட்ச் பிடிக்க காக்கா, டினோசர், நமீதா மூணு பேரும் டிரை பண்ணுறாங்க.
மணி : இது க்ளைமாக்ஸ். வேணும் மெஸேஜ்.
செல்வா : டினோசர் பஜ்ஜியை கேட்ச் பிடிச்சுட்டு, நமீதாவையும் தூக்கிட்டு மௌண்ட் ரோட்டுல ஓடுது.
ஷங்கர் : காக்கா ஹீரோ துரத்துது. இந்த சேஸிங் சீனை செம த்ரில்லிங்கா எடுக்கணும். செல்வா : ஓடிக்கிட்டிருக்கும்போதே பஜ்ஜியை லைட்டா டேஸ்ட் பண்ணிப் பாக்குற டினோசர் அதை வேண்டாம்னு துப்பிடுது.
மணி : சொல்லணும் இங்க மெஸெஜ். டினோசர் நான் வெஜ். பஜ்ஜி வெஜ். பிடிக்கல! அதான் பிடிக்கல! துப்பிடுது.
ஷங்கர் : கூவத்துல விழப் போன பஜ்ஜியைக் கைப்பற்றிட்டு, எப்படி நமீதாவை டினோசர்கிட்ட இருந்து பைட் பண்ணி காக்கா ஹீரோ காப்பாத்துதுன்னு துடிக்கத் துடிக்கக் காட்டி, கடைசியில ஒரு லவ் சென்டிமென்ட்டோட படத்தை முடிக்கிறோம்.
செல்வா : சரி, வா மச்சான். ரொம்ப சிந்திச்சிட்டோம். பசிக்குது. நாயர் கடையில சிங்கிள் டீயை ஒன் பை த்ரீ குடிச்சிட்டு வந்து, நரி, திராட்சை பழம் பறிக்கப் போன கதையை டெவலப் பண்ணலாம்.

**********
(லொள்ளு தர்பார் - தினமணிக் கதிர் - இரு வாரங்களுக்கு முன்பு)

4 Comments:

  • I like this lollu darbar..

    But the links in earlier posts are not working.. Why dont you put a permanent post in your blog always? like this one.

    By Blogger kirukan, at Wednesday, November 09, 2005 4:59:00 pm  

  • அப்பா சாமி முகில்.... சிரிச்சு முடியல.....

    உங்க பேர போட்டு எங்க மக்களுக்கு எல்லாம் மின்னஞ்சல் அனுப்பிட்டேன். சீக்கிரமே உங்களுக்கும் வந்தாலும் வரும்.

    By Blogger Ganesh Gopalasubramanian, at Wednesday, November 09, 2005 6:20:00 pm  

  • kalakkal article...

    By Anonymous Anonymous, at Wednesday, November 09, 2005 6:43:00 pm  

  • நன்றி.. கிறுக்கன்.. கோ.கணேஷ்.. ஜாஜா..
    இனி 'லிங்க்' இன்றி முழு கட்டுரையையும் கொடுக்கிறேன்.
    (இப்படி 'லிங்க்' மட்டும் கொடுத்ததால் எனக்கு 'லிங்குசாமி' என்றொரு பெயரையும் வைத்துவிட்டார்கள்..)
    --முகில்---

    By Blogger துடிப்புகள், at Thursday, November 10, 2005 10:54:00 am  

Post a Comment

<< Home