தமிழ் முகில்

Saturday, December 10, 2005

கஸ்தூரி மான் - விமர்சனம்




நீண்ட நாள்களுக்குப் பிறகு கதாநாயகியைச் சுற்றி பின்னப்பட்ட கதையோடு வந்துள்ள படம். கல்லூரியில் பணக்கார வீட்டுப் பெண் போல் பந்தாவாக குறும்பு செய்யும் கதாநாயகி உமா. கதாநாயகனின் அருணின் தந்தை பணத்தை எல்லாம் சினிமா தயாரிப்பில் தொலைத்து விட்டு நிற்கிறார். அடுத்த வேளை சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாமல் 'மாடி வீட்டு ஏழை'யாக ஐ.ஏ.எஸ். லட்சியத்துடன் கல்லூரியில் படிக்கிறார் அருணின் நிலை தெரியாமல் அவரை பலமுறை வம்புக்கிழுக்கும் உமா, அவன் நிலை தெரிந்து உதவ ஆரம்பிக்கிறாள். ஆனால் நான்கு வீடுகளில் பார்ட் டைம் நர்சாக வேலை பார்த்து தன் குடும்பத்தைக் காப்பாற்றுகிறாள், தன்னை அடைய ஆசைப்படும் அக்கா புருஷனோடு போராடிக் கொண்டிருக்கிறாள் என உமாவின் பின்னணி கதையில் விரிகிறது. மென்மையான காதல் விரிகிறது. தன் காதலனை ஐ.ஏ.எஸ். ஆக்கப் பாடுபடுகிறாள். ஒரு கட்டத்தில் தன்னை, தன் அக்காவை காப்பாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் அக்கா கணவனை கொலை செய்துவிட்டு சிறைக்குச் செல்கிறாள் உமா. கலெக்டராக திரும்பும் அருண், உமாவை வெளியே எடுக்க முயற்சிக்க மறுத்து விட்டு தண்டனை அனுபவிக்கிறாள்.
நாயகியின் உதவியை ஏற்றுக்கொள்ளும் நாயகன், தன் குற்றத்திற்காக முழுமையாக தண்டனையை அனுபவிக்க நினைக்கும் கதாநாயகி என்ற விஷயங்கள் ப்ளஸ்!
காதல் காட்சிகளாகட்டும், சண்டைக் காட்சிகளாகட்டும் - மென்மை இழையோடுகிறது. ஆனால் வசனங்களில் கூர்மை தெரிகிறது. ஒரு சில காட்சிகளைத் தவிர வசனகர்த்தாவாக அறிமுகமாகியுள்ள ஜெயமோகனைப் பாராட்டி வரவேற்கலாம்.
இப்ப வர்ற எந்தப் பாட்டைக் கேட்டாலும் அது காதுகளைக் 'குத்து'து. இந்தப் படத்துல இளையராஜா இசையாமே. நல்ல பாடல்கள் கேட்கலாமுன்னு நம்பிப் போனா பெரிய ஏமாற்றம்.
குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால மழை தமிழ்நாட்டுல கொட்டோ கொட்டுன்னு கொட்டுற மாதிரி, மீரா ஜாஸ்மின் (உமா) நிறைந்த நடிப்பால திரையில நவரசத்தைக் கொட்டியிருக்காங்க! இன்னொரு சாவித்திரின்னு வாய் வலிக்கச் சொல்லிப் பாராட்டலாம்.
வெட்டிச் சவுடால், புஜ பலம் காட்டும் கதாநாயகர்கள் மத்தியில் பிரசன்னா (அருண்) ஒரு பட்டாம்பூச்சி போல நம் மனதில் வந்து அமர்கிறார். 'இவன் நம்மளை மாதிரிதான்பா' என ஒரு நெருக்கம் ஏற்பத்துகிறது அவரின் கதாபாத்திரம்.
புது மலையாள வில்லி லீலாவின் நடிப்பு க்ளாஸ். பாதராக வரும் நடிகர் திரையில் தோன்றும் போதெல்லாம் க்ளாப்ஸ்!
வருடக்கணக்கில் பொறுமையாக மெகா சீரியல் பார்க்கும் மக்களால், இந்தப் படத்தை இரண்டரை மணி நேரம் பொறுமையாக பார்க்க முடியுமா என்றால் சந்தேகம்தான். தெளிவான திரைக்கதை ஓட்டத்துடன் ஒரு படம் பார்த்து எவ்வளவு நாளாச்சு? என ஏங்கும் ரசிகர்களுக்கு ட்ரீட் தர வந்துள்ள படம் என மனதார பாராட்டலாம். ஆனால் 'திரைக்கதையில் வேகம்' என்ற ஃபார்முலா வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கும் காலத்தில் கஸ்தூரிமானால் ஈடு கொடுக்க முடியாது.

0 Comments:

Post a Comment

<< Home