தமிழ் முகில்

Tuesday, January 03, 2006

சந்திரபாபுவின் நெகிழ்ச்சியூட்டும் வாழ்க்கை

கண்ணீரும் புன்னகையும் - நிகரற்ற நகைச்சுவைக் கலைஞர் சந்திரபாபுவின் நெகிழ்ச்சியூட்டும் வாழ்க்கை!
இது சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வெளிவரவிருக்கும் எனது புத்தகம். வெளியீடு : கிழக்கு பதிப்பகம்.
சந்திரபாபு என்ற மனிதர் வாழ்ந்த ரசனையான, ரகளையான, ரணமான வாழ்க்கை பற்றிய ஒரு தொகுப்பு இந்நூல்.
இந்தப் புத்தகத்துக்குப் பின் எனது மூன்று மாத உழைப்பு இருக்கிறது. சந்திரபாபுவின் வாழ்க்கையைத் தேடி புத்தகமாக்க முயன்றபோது கிடைத்த அனுபவங்களைக் கொண்டு 'Making of Chandrababu' என்றொரு தனிப் புத்தகமே எழுதலாம். புத்தகத்தில் சந்திரபாபுவே சொல்வது போல் அமைந்துள்ள ஒரு கட்டுரையின் சிறு பகுதி முன்னோட்டமாய் உங்களுக்காக...



************
என் உள்ளத்தில் புரையோடிப் போயிருக்கும் புண்ணை நான் கீறப் போகிறேன்.
எதிரில் இருப்பது முள்வேலி என்றறிந்தும் அதன் மேல் சாய்ந்தேனே, என் உடல் என்ன ஆயிற்று என்பதை உங்களுக்குச் சொல்ல வேண்டாமா?அதைத்தான் சொல்லப் போகிறேன்.ஏன் இவ்வளவு காலதாமதம் என்று கேட்கறீர்களா! காரணத்தைச் சொல்கிறேன்.
'பொறுத்தார் பூமி ஆள்வார்' என்பது தமிழ் மொழி அல்லவா, அதனால்தான் பொறுத்து வந்தேன்.'பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு' என்பதும் தமிழ் மொழியாக இருக்கின்ற காரணத்தால் இன்று நான் உண்மையைச் சொல்லப் போகிறேன்.
பல லட்சங்களுக்கு அதிபதியான நான், இன்று சில நூறு நோட்டுக்களையே பார்க்கக் கூடிய அளவிற்கு மாறிய கதையை நீங்கள் உணர வேண்டாமா!
நான் மக்கள் திலகமல்ல...இன்று வைக்கப்படும் திலகம் நாளை அழிக்கப்பட்டு விடுகிறதே! நான் உங்கள் உள்ளத்தில் இருப்பவன். அதனால் உண்மையைச் சொல்கிறேன்.கதாசிரியராக, வசனகர்த்தாவாக, டைரக்டராக, தயாரிப்பாளராக நான் மாறிய கதையும், முடிவில் புரொடக்ஷன் மேனேஜர் நிலைக்கு வந்த கதையும் இதில் அடங்கும்.
எரிமலைகளே தன்னுள் அடக்கி வைத்திருக்கும் வெப்பத்தை ஒரு நேரத்தில் அடக்க முடியாமல் வெடித்து கக்கி விடுகிறதே.. இந்த பாபு சாதாரண மனிதன் தானே! மனதிற்குள் போட்டு பூட்டி வைத்து அது சீழ் பிடித்து, ரணமாகி என்னை எத்தனை துன்பப்படுத்தி விட்டது. நான் உங்களிடம் அதைக் கொட்டி மனவேதனையை ஓரளவு குறைத்துக் கொண்டிருக்கிறேன்.
அது மட்டுமல்ல.. என் சுயசரிதம் பல வழிகளில் பலருக்குத் துணையாக இருக்க வேண்டும் என்ற எண்ணமும் ஒரு காரணம்தான். சுயசரிதம் என்பது என்ன? வாழ்க்கையில் உயர்நிலை அடைந்த பலர் பொய்யும்- புனை சுருட்டுமாக இன்று ஏதோ எழுதுகிறார்களே.. அதுவா சுயசரிதம். நாம் தாழ்ந்த நிலையில் இருந்தோம் அதைச் சொன்னால் இன்றைய உயர்ந்த வாழ்க்கைக்கு அது இழிவாகப் படுமே என்றெண்ணி, அதை மறைத்து, பிறக்கும் போதே மோதிரம், செயினுடன் பிறந்ததாக போலி வேடம் போட எனக்குத் தெரியவில்லையே..
பாபு நல்லவன்.. வெகுளி.. என்ற பட்டங்கள் எனக்குண்டு. அதை என்றென்றும் காப்பாற்றிக் கொள்ள விரும்புகிறேன். அதனால் உண்மைகளைச் சொல்கிறேன்.
*************