தமிழ் முகில்

Wednesday, November 30, 2005

வேட்டையாடு! விளையாடு!

அமெரிக்கா..
கமல்..
ஜோதிகா..
கௌதமி.. (மேனேஜர் ஆஃப் கமலஹாசன்)
இரண்டு புகைப்படங்கள்..
யாரோ வேட்டையாடியது...
விளையாட்டாக மெயிலில் உலாவிக் கொண்டிருக்கிறது.
ச்சும்மா.. ஒரு சமூக சேவையா என் பதிவில் இந்த புகைப்படங்கள்!




Tuesday, November 29, 2005

கவர் ஸ்டோரி உருவாக்குவது எப்படி?

பிரபல(!) வாரமிருமுறை பரபரப்பு பத்திரிக்கையின் ஆசிரியர் அறை. கொஞ்சம் சூடாகவே இருக்கிறார் ஆசிரியர். 'சீனியர் புறா', 'சுவாமி சுனாமியானந்தா' என்ற புனைப் பெயரில் எழுதும் இரு உதவி ஆசிரியர்கள் அவர் முன் அமைதியாக பவ்யமாக உட்கார்ந்திருக்கிறார்கள்.

ஆசிரியர் : போன நாலு இஸ்யூல நம்ம சர்க்குலேஷன் பத்து சதவிகிதம் குறைஞ்சிருக்கு. நம்ம போட்டி பத்திரிக்கைக்கு ஏழு சதவிகிதம் கூடியிருக்கு. இப்படியே போனா ஊத்திக்கும். எல்லாரும் வேற எங்கேயாவது வேலை கிடைக்குமான்னு தூண்டில் போட வேண்டியதுதான். நீங்க என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோன்னு எனக்குத் தெரியாது. பத்திக்குற மாதிரி ஒரு மேட்டரை கெளப்பி விடுறீங்க. அந்த மேட்டரை வைச்சே இன்னும் ஏழெட்டு இஸ்யூவோட கவர் ஸ்டோரியை காரசாரமா பண்ணிடனும். விட்ட சர்க்குலேசன் கிச்சுன்னு ஏறணும். எந்த அரசியல்வாதி வாயைப் புடுங்குறீங்களோ, இல்ல எந்த நடிகையை சர்ச்சைல மாட்டி விடுவீங்களோ, எந்த கிளுகிளு சாமியாரை உருவாக்குவீங்களோன்னு எனக்குத் தெரியாது. இன்னும் ஒரு மணி நேரத்துல என் டேபிள்ல சூட்டைக் கெளப்புற கவர் ஸ்டோரி இருக்கணும். நீங்க போகலாம்.

கொஞ்சம் கிறுகிறுக்கும் தலையுடன் வெளியே வரும் சுனாமியும், புறாவும் பேப்பர் பேனாவுடன் சென்று ஒரு டேபிளில் அமர்கின்றனர். ஐந்து நிமிட மௌனத்திற்குப் பிறகு...

சுனாமி : ஆங்.. ஐடியா.. நம்ம அரசியல்வாதி கால்'வாய்' கண்ணாயிரத்துக்கு போனைப் போடு. அவங்கிட்ட எதையாவது போட்டு வாங்கலாம். அதை வைச்சு ஈரை பேனாக்கி, பேனை பெருமாளாக்கிரலாம்.
(புறா போன் போட்டுத் தர..)
சுனாமி : அண்ணே வணக்கம்னே.. நாந்தான் சுனாமி பேசறேன். சுகம்தான?கால்வாய் : வணக்கம்வே! என்னவே போனமொற நம்ம பத்திரிக்கையில நம்ம கட்சிக்காரப்பயலைப் பத்தி இப்படி கண்டதும் எழுதிப்புட்ட! நானே உங்கிட்ட சண்டை போடணும்னு நெனைச்சுக்கிட்டு இருந்தன்வே! நீயா வந்து வசமா சிக்கிக்கிட்டவே!
சுனாமி : என்னண்ணே நீங்க.. என்னப் போயி சந்தேகப்படுறீங்களேண்ணே! நான் நீங்க வெட்டிப் போட்ட நகத்துல இருக்குற அழுக்கைப் பத்திக் கூட தப்பா எழுத மாட்டேன் உங்களுக்குத் தெரியாதாண்ணே! அது ஒரு புது ரிப்போர்ட்டர் பய செஞ்ச வேலைண்ணே! போன வாரம் நான் லீவுண்ணே! அதான் என்னை மீறி இப்படி ஆயிடுச்சுண்ணே! பாத்தீங்களாண்ணே, எம்புட்டு விசுவாசமுள்ள என்னைப் போயி...
கால்வாய் : அதானப் பாத்தேன். சரி விடுவே! இப்ப என்னவே விசேஷம்?சுனாமி : அதை நீங்கதாண்ணே சொல்லணும். நேத்து மொளச்ச பயலுக திமிரா எகத்தாளமா ஏதாவது ஏடாகூட அறிக்கை விட்டுக்கிட்டு தலைப்புச் செய்தி யிட்டு இருக்காணுங்க! உங்க பவரை நீங்க காட்ட வேணாமாண்ணே!கால்வாய் : இப்ப என்ன பண்ணனுங்கற?
சுனாமி : புதுசா அந்த நடிகரு ரமணராஜ் கட்சி தொடங்கியிருக்காரே அவரு உங்ககூட கூட்டணி வைக்க தொங்கிக்கிட்டு இருக்கறதா பேச்சு அடிபடுதே, உண்மையாண்ணே?
கால்வாய் : சும்மாக் கெடவே! அவன் நம்ம சாதிக்காரப் பய. அரசியல்ல பழம் தின்னு கொட்ட போட்டவன் நான். ஒரு மருவாதைக்கு தேடிவருவான்னு நெனைச்சேன். இதுவரைக்கும் வரல. எலெக்சன் வரும்ல அப்ப பாத்துக்கலாம்.
சுனாமி : சரிங்கண்ணே.. நீங்க ரொம்ப பிசியா இருப்பீங்க. தொந்தரவுக்கு மன்னிச்சுக்கோங்கண்ணே! வைச்சிடுறேன். (போனை கட் செய்து விட்டு, புறாவிடம்) செம மேட்டர் கிடைச்சுடுச்சு. டைட்டில் இதுதான். 'தலைகணத்தில் தடுமாறுகிறாரா ரமணராஜ்?' - அரசியல் தலைவர்கள் அதிருப்தி. எப்படி!
புறா : அப்படிப்போடு. இதை அப்படியே விடக்கூடாது. இன்னும் கெளறி விடலாம். கொஞ்சம் இருங்க. (ஒரு எண்ணை டயல் செய்கிறார்.) வணக்கம். நான் புறா பேசுறேன். புரட்சி லீடர் ரமணராஜ் இருக்காருங்களா.
எதிர்முனை : வணக்கம். வணக்கம். நான் லீடரோட செகரட்டரி லிங்கம்தான் பேசறேன். லீடர் ஹைதராபாத் ஷூட்டிங் போயிருக்காரு. என்ன விஷயம்ணு சொல்லுங்க. எதுவும் முக்கியம்னா நான் லீடர்கிட்ட கேட்டுச் சொல்லுறேன்.
புறா : என்ன இப்படிக் கேட்டுப்புட்டீங்க. அந்த சாதிக் கட்சித் தலைவர் 'நம்ம லீடருக்கு பணிவே கெடையாது. அவுத்த வுட்ட ஜல்லிக்கட்டு காளை மாதிரி திமிறிக்கிட்டு அலையறாரு. மூக்கணாங்கயிறு மக்கள் போட்டுருவாங்க'ன்னு இஷ்டத்துக்கு அறிக்கை விட்டிருக்காரு. நீங்க என்னடான்னா ஒண்ணும் நடக்காத மாதிரி கேக்கறீங்க?
எதிர்முனை : அப்படியா! எதுல சொன்னாரு. எனக்கு ஏதும் நியூஸ் வரலியே?புறா : அவர் சேனல்ல தான் சொன்னாருங்கிறேன். அதுபோக இப்பத்தான் அவரை பேட்டி எடுத்தோம். அதுலயும் நம்ம லீடரை இப்படியெல்லாம் பேசிப்புட்டாரு. மனசு கேக்கல. அதான் உங்க காதுல விசயத்தைப் போட்டுட்டு, அப்படியே லீடர்கிட்ட கருத்து வாங்கிப்புடலாம்னுதான் போனைப் போட்டேன்.
எதிர்முனை : லீடர் ஷூட்டிங் முடிச்சுட்டு, தன் பையன் பொறந்த நாளை சித்தூர் பக்கத்துல உள்ள ஒரு கோயிலுக்கு போய் கொண்டாடிட்டு நாலு நாள் கழிச்சுத்தான் சென்னைக்கு வர்றாரு. அப்ப லீடர் கண்டிப்பா நேரம் ஒதுக்கிப் பேசுவாரு.
புறா : ரொம்ப நல்லது சார். (போனை கட் பண்ணி விட்டு) மேட்டரை டெவலப் பண்ணிக்கோங்க.. 'ஆந்திரா பக்க்கத்திலுள்ள ஒரு சிறிய கிராமத்தில் ரமணராஜ் ரகசிய யாகம்! நரபலி கொடுத்தது உண்மையா?' எப்படி.
சுனாமி : சூப்பரப்பு.
புறா : னா மேட்டர்ல பரபரப்பு இருக்கு. ஆனா கிளுகிளுப்பே இல்லையே. என்ன பண்ணலாம்?
சுனாமி : எதாவது நடிகையை இழுத்து உட்டுட்டா பரபரப்பு + கிளுகிளுப்பு ரெண்டும் கெடைக்கும். நாமளும் பேஜ் லே-அவுட்டை கவர்ச்சியா பண்ணலாம்.
புறா : சூப்பரா சொன்னீங்க. இந்த இஸ்யூக்கு இது தாங்கும். அடுத்த இஸ்யூக்கு நடிகை கிஷிதாவை கிள்ளி உட்டுருவோம்.
சுனாமி : எப்படி?புறா : 'டேட்டிங்' பத்தி ஏதாவது கேப்போம். அது தமிழ் தெரியாம ஏதாவது உளறி வைக்கும். 'டேட்டிங் போவது பெண்களின் கடமை'ன்னு நியூஸ் ஆக்கிருவோம். அப்புறம் கொடும்பாவி எரிப்பாங்க. கேஸ் போடுவாங்க. ஆர்ப்பாட்டம் நடத்துவாங்க. 'டேட்டிங்'குக்கு ஸ்பெல்லிங் தெரியாதவனுங்க கூட தெனாவெட்டா அறிக்கை உடுவாங்க.
சுனாமி : இப்படி ஒரு பிரச்னையைக் கெளப்பி விட்டா கண்டிப்பா கால்வாய் 'கலாச்சாராம் காராச்சேவு'ன்னு கொதிச்சு எழுவாரு. ஆனா கிஷிதா நம்ம ரமணராஜோட தொடர்ந்து மூணு படம் சோடி கட்டிட்டு வர்ற நடிகை. அதனால ரமணராஜ் வேற வழியில்லாம படத்துல இருந்து கிஷிதாவைத் தூக்கிக் கெடாச வேண்டியது வரும்.
புறா : இதை அப்படியே விடலாமா.. எவனாவது இந்த கேப்ல நெட்ல கிஷிதா மூஞ்சை மார்ஃப்பிங் பண்ணி ஏதாவது போட்டாவை விடுவான். உடனே கிஷிதாவுக்கும் சர்வதேச கொலைகாரன் அமாம் உபருல்லாக்கும் தொடர்பிருக்குன்னு தெரிஞ்சதாலதான் ரமணராஜ் தான் படத்துல இருந்து தூக்குனாருன்னு ஒரு கவர் ஸ்டோரி பண்ணிடலாம்.
சுனாமி : இதுல ஏதாவது சாமியாரை இழுத்து விட்டுட்டோம்னா இன்னும் கனலா இருக்கும்.
புறா : அவ்ளோதான. 'முழியாங்கண்ணன் பட்டி முடி சாமியார்'னு ஒரு கேரக்டரை உள்ள நுழைச்சுருவோம். இந்த சாமியார்கிட்டதான் அமாவாசை அன்னிக்கு நைட்டோட நைட்டா போயி ரமணராஜ் முடி ஜோசியம் பாத்தாரு. அவரோட முடி அமைப்புப் படி அவருக்கு முன்னந்தலைல மூணு சென்டி மீட்டருக்கு சொட்டை விழுந்துருக்கறதால அவரு கட்சியோட பேரை மாத்தணுமாம். 'க' எழுத்துல பேரு ஆரம்பிக்குற அரசியல்வாதிங்க கூட கூட்டணி வெச்சுக்கக்கூடாதாம். அதுக்கு பரிகாரமா அடுத்த அமாவாசைக்கு 108 வழுக்கைத் தலையர்களுக்கு விக் தானம் பண்ணப் போறாராம். அதுக்காக 108 பேரை கட்சிக்காரங்க மும்முரமா தேடிக்கிட்டு இருக்காங்களாம். எப்படி நம்ம நியூஸ்!
சுனாமி : இப்படி விட்டுப்புட்டா மேட்டர் பிசுபிசுத்துரும். அந்த முடி சாமியார் மேல நாலு கேஸ் இருந்தாத்தான் வெயிட்டா இருக்கும். எப்படியாவது தோண்டித் துருவி அந்த சாமியார் மேல கேஸைக் கொண்டு வந்துரலாம். அதுவும் சுண்டக் கஞ்சி கடத்தல் கேஸ் ஏதாவது இருந்தா கலக்கலா இருக்கும்.
புறா : சாமியார் கூட 'சுண்டக் கஞ்சி கடத்தல்'ல தொடர்பு வைச்சிருந்த அழகின்னு எவளாவது அடுத்து சிக்காமலா இருப்பா. 'சுண்டக் கஞ்சி கடத்தல் தேவதை'யோடு தொடர்புடைய அரசியல்வாதிகள்னு எல்லாக் கட்சியில இருந்தும் வந்து தானா பட்சிங்க சிக்குவாங்க.
புறா : இப்படியே போனா அடுத்த சட்டசபைத் தேர்தல் வர்ற வரைக்கும் கவர் ஸ்டோரிக்கு தட்டுப்பாடே வராது. கலக்கிப்புடலாம்.
சுனாமி : சரி சரி. நான் ஸ்டோரியை எழுதுறேன். நீ போய் புக் அட்டையையும், போஸ்டரையும் லே அவுட் பண்ண ஆரம்பி. ஏதாவது போட்டோ தேறுதான்னு பார்ப்போம். எல்லாத்தையும் மிக்ஸ் பண்ணி கெளப்பி விட வேண்டியதுதான்.
புறா : சூப்பரு. இந்த இஸ்யூ சர்குலேசன் ஓஹோதான். நீ எடிட்டர்கிட்ட ஓ.கே. வாங்கிடு. நான் லே-அவுட்டுக்குப் போறேன்.

[லொள்ளு தர்பார் - இந்த வாரம் - எடிட் ஆகாத வெர்ஸன் :-)]

Monday, November 21, 2005

பின்நவீனப்புதுக்கவிக்கானா!

லொள்ளு தர்பார்
தினமணிக்கதிர்
(20.11.2005)
பின்நவீனப்புதுக்கவிக்கானா!

கடற்கரை. பொட்டலத்தில் இருந்த கடைசி கடலையையும் சாப்பிட்டு விட்டு, அந்த வெள்ளைக் காகிதத்தை பறக்க விட்டு விட்டு, கடலலையை நோக்கி ஓடுகிறான் அந்தச் சிறுவன்.
காகிதம் பறக்கிறது... பறக்கிறது... தரையை அடையப் போகிறது.
அந்த வெள்ளைக் காகிதம் மண்ணை முத்தமிடப் போகும் வேளையில் மூன்று கரங்கள் அதைப் பிடிக்கின்றன.
அந்தக் கைகளுக்கு சொந்தக்காரர்கள் (காங்கிரஸ்காரர்கள் அல்ல) குருதிப்ரியன், மன்மதபிரபு, கானா கதிரு!

கதிரு : இன்னா மாமூ, நாம கை வெச்ச பொருள் மேலயே கைய வெக்கிரியா?

மன்மதன் : ஹே.. நான் தான் முதல்ல பிடிச்சேன். எனக்குத்தான் இந்தப் பேப்பரு.

குருதி : கொத்துச் சிறகில் ஒற்றை இறகாய் பிரிந்து, பறந்து வந்திருந்தால் என் கண்கள் எதிர்ப்புறம் நோக்கியிருக்கும். அதுவல்லவே இது! என் நெஞ்சக் குழியில் குமிழ் பரப்பும் நெருப்பின் ஜுவாலைகளை இட்டு நிரப்ப வேண்டுகிறேன் இக்காகிதம்!

கதிரு : நெருப்போ, பருப்போ மவனே! டாப்பு டோப்பு வாங்கிக்கும். மருவாதியா பேப்பரை வுடுறியா இல்லியா?

மன்மதன் : என்ன மேன், உனக்கு காது குடையறதுக்குத்தான் இந்தப் பேப்பரைக் கேக்கறீயா? அதுக்கு வேற பேப்பர் எடுத்துக்கோ மேன். நான் இதுல காதல் கவிதை எழுதப் போறேன்.

கதிரு : இன்னா கவிதயா.. நம்ம கானா முன்னால உங்கவித கவுந்தடிச்சு கதறும்டி! நான் சூப்பரா கானா கட்டப் போறேன். பிரச்ன பண்ணாம பேப்பரை இங்க தள்ளு.

குருதி : அற்பம் உமிழ்ந்த எச்சில் கரை ஒதுங்கிய பித்தர்களே! என்போல் பின்நவீனத்துவம் உங்களால் படைக்க முடியுமா? என் எழுத்துக்கள் பிரளயங்களின் நிழல் தேடா அணுக்கதிர்கள்!

கதிரு : மவனே நீ பேசறது தமில்தானா... அத முதல்ல சொல்லு.. சும்மா சாமியாடாத!

மன்மதன் : சரி. ஒரு போட்டி வைச்சுக்குவோம். பேப்பரை நடுவுல வைச்சிருவோம். மூணு பேருமே கவிதை சொல்லுவோம். நல்லா சொல்லுறவங்களுக்கு மத்த ரெண்டு பேருமே பேப்பரை விட்டுக் கொடுத்துரணும். ஓ.கே.வா?

கதிரு : ஹாங்.. இது மருவாத! நா ரெடி கண்ணு!

குருதி : வெளிச்சம் தேடிக் கழிந்த பறவை, விரகத் தீயில் விழித்தது போல் மாட்டிக் கொண்டேன்.

கதிரு : இப்ப இன்னாங்கிற.. ஒத்துக்கிறேங்கிறியா... ஒத்துக்கலையா?

குருதி : ம்.

மன்மதன் : என் பெயர் மன்மதபிரபு. கவிதைகளைச் சுவாசிப்பது, அவள் காலடிகளை மட்டும் வாசிப்பது, கனவுகளில் மூழ்கி யோசிப்பது, காதலைத் திணற திணற நேசிப்பது என் பொழுதுபோக்கு.

கதிரு : நாதான் கானா கதிரு. மச்சான் கானா கட்ட ஆரம்பிச்சேன்னா, சைதாப்பேட்டை சங்கூதும். கண்ணம்மாபேட்டை மோளம் அடிக்கும். கொசப்பேட்டை குத்து டான்ஸ் ஆடும். ஆல் பேட்டைஸ், அய்யா கானாவுக்கு சலாம் போட்டு ஆடும்.

குருதி : மீட்சிகளின் வழி கசிந்த உதிரங்களின் இடுக்குகளில் பிறந்த எனக்கு பெற்றோர் வைத்த பெயர் நகம் போல காலத்தின் சீழ் வடியும் விரல்களிலிருந்து வெட்டப்பட்டு விட்டது. பின் ஆழ்மனம் அலற, என் ஆத்மா உலர எனக்கு நானே வைத்துக் கொண்ட அடையாளம் குருதிப்ரியன்.

கதிரு : அதுக்கு இன்னாபா அர்த்தம்?

மன்மதன் : குருதின்னா இரத்தம். 'ப்ரியன்'னா நேசிப்பவன்.

கதிரு : அடப்பாவி அப்படின்னா நீ ரத்தக் காட்டேரியா. உன் பேச்சு ஒரு தினுசா இருக்கையிலே நெனச்சேன். நீ சாதாரண மனுச சென்மம் இல்லேன்னு.

மன்மதன் : அது அவரு வைச்சுக்கிட்ட புனைப்பெயர்ப்பா!

கதிரு : புனப் பேரோ! பூனைப் பேரோ! யாராவது வெரசா கவித கட்டுங்கப்பா!

மன்மதன் : தலைப்பு : காதல்...
எல்லா ரோஜாக்களும்
என் கன்னங்கள் தேடி
தங்கள் இதழ்கள் உதிர்க்க
காத்திருக்கின்றன.. ஆனால்
என் கன்னங்கள் காத்திருப்பது
உன் செவ்விதழ்களின் வழியே
வழியும் காதலைச் சுமக்கத்தான்!

கதிரு : ரோசாப்பூ செவப்புன்னு என்னென்னமோ சொன்ன கண்ணு.. ஒரு எலவும் பச்சக்குன்னு நெஞ்சுல பதியல.. இப்ப நம்ம கானாவை கேளு மாமூ!

வடபழனிக்கு போக டொவல் பி பஸ்சு!
45 பி போகும் ஆழ்வார்பேட்டை லஸ்சு!
ரெண்டு பஸ்சுலயும் நான் எடுக்கமாட்டேன் டிக்கெட்டு!
ஏன்னா - அதுல தான வருது என்னோட 'டிக்கெட்டு'!

மன்மதன் : எப்பா ராசா.. கவித சொல்லச் சொன்னா, நீ பஸ் ரூட்டைச் சொல்லுற! அய்யா பின்நவீனத்துவம்.. நீங்க ஆரம்பிங்க!

குருதி : மீளாக் கனவின் ரௌத்திரத்தில்
தீராப் புரிதலின் பூதாகரத்தில்
தொக்கி நிற்கும் பூக்குட்டிக் கிளையில்
தேங்கித் தவிக்கும் குடைக்கம்பிச் சாரலில்
ஈரமின்றி ஒழுகும் வியர்வைப் பச்சோந்தியின்
உறவற்ற உருவமே காதல்!

கதிரு : அடங்க மாட்டியா நீ! பச்சோந்தி பரதேசின்னு! புரியறாப்ல பேசக்கூடாதுன்னே கெளம்பி வந்திருக்கான்யா இவன். இப்ப நான் வுடுறேன் கேளு.
இங்க் போட்டா எழுதும் பேனா!
இங்க வந்து நீயா பேசு தானா!
மங்கி கேப் போட்ட உங்கப்பன் வேணாம்!
மயங்கிப்புட்டேன் உன் அழகில் நானா!
கடல முட்டாய் தின்னாப் பித்தம் வீணா!
உன்னக் கண்ணடிச்சுக் கூப்பிடுது என் கானா!

குருதி :(மனதிற்குள்) குதறிக் கிழித்து, வார்த்தைகளைப் புதைத்து, அழுகிய மொழியில் அமிலம் ஊற்றும் அறிவிலிகள்.

மன்மதன் : என்னப்பா இது கானான்னு சொல்லி கவித குரல்வளையை நெறிக்கிற! இவர் என்னன்னா அவருக்கே புரியாத மாதிரி, யாருக்கும் புரியக்கூடாதுன்னு, வேற்றுக் கிரக பாஷை பேசுறாரு. என்ன மாதிரி ஜனரஞ்சக தமிழ்ல கவிதை சொல்லப் பழகிக்கோங்கப்பா.. இதைக் கேளுங்க. காதல் மென்மையா ஒரு வலியோட, ஒரு புன்னகையோட, ஒரு எதிர்பார்ப்போட, ஒரு ஏக்கத்தோட எட்டிப் பார்க்கும்.
உன் கூந்தல் உதிர்த்த
ஒற்றைப் பூ..
உன் விரல்கள் இழந்த
பிறை நிலா நகங்கள்..
உன் இதழ்கள் உறிஞ்சிய
புரூட்டி பாட்டில்..
உன் சுடிதார் இழந்த
ஒரு ஊதா நூல்..
இவைகளிடம் கேள் -
அவை சொல்லும் என் காதலின் வாசத்தை!

கதிரு : கலீஜா இருக்குப்பா.. காதலு பத்தி சொல்லச் சொன்னா, குப்பத் தொட்டியில என்னலாம் கெடக்கும்னு லிஸ்ட் வுடுற! இன்னாக் கவிதயோ, கண்றாவியோ! எப்பா இரத்தக் காட்டேரி, பேயடிச்சவன் பினாத்துற மாதிரி பேசுவியே, அதைச் சொல்லு.

குருதி : ஒலியில்லா இருள் வெளியில் பிம்பங்களுக்கு புரிவதில்லை நிழல்களின் ஓசை! பிழைத்துப் போங்கள்!

மனப் பிரபஞ்சத்தின் ஊடாக
பிணம் தேடும் ஒற்றை மேகம்!
வலி கீறும் வன்மத்தின் மொட்டுகளில்
சோம்பல் முறிக்கும் தட்டாம் பூச்சி!
சடலத் தீயின் குளிர் ஜுரத்தில்
சருகு பொறுக்கும் ஒவ்வாமை ஓநாய்!
மலர்களின் குரோதப் பின் குறிப்பில்
வெளிரிக் கிடக்கும் பிளாஸ்டிக் - காதல்!


கதிரு : சூப்பரு.. இன்னாமா பேசறான்பா! சோக்காக்கீது! அப்டி எதுனா உசரத்துல ஏறி கூவிக்கின்னே தொபுக்கடீர்னு நீ குதிச்சேட்டேன்னா, நாடு உருப்பட்டுரும்!

குருதி : சிறகசைத்துச் சிதறும் கழிவுகளின் மேல் முட்டையிட்டு முகம் பார்க்கும் பெட்டைக் கோழி ஜென்மங்கள் என் பேனா பற்றி பேச வேண்டாம்.

கதிரு : (மன்மதனைப் பார்த்து) இன்னாபா சொல்லுறாரு?

மன்மதன் : அதெல்லாம் எனக்கும் புரியல. உன்னை ஏதோ 'கப்பு' அடிக்கிற மாதிரி திட்டுறாருன்னு மட்டும் புரியுது.

கதிரு : ஏய்.. தேனாப் பாயுற எங் கானாவை திட்டுறியா நீ.. உன் மூஞ்சியில என் லெஃப்ட் ஹேண்டை வைக்க.. ஏய்..

குருதி : சூட்சுமத்தின் எரி குழம்பில் வழியும் திராவகத்தை நக்கிச் செல்லும் கொடுக்கில்லா நாய்ப் பல்லில்..

கதிரு : யாரை பாத்து நாய்ன்னு சொல்லுற..
(கதிரு வீடு கட்டி, தன் பேனாக் கத்தியை உருவ அவர்கள் அங்கிருந்து ஓட ஆரம்பிக்கின்றனர். கேட்பாரற்றுக் கிடக்கும் அந்த வெள்ளைக் காகிதத்தை எடுத்த ஒரு சிறுவன் தன் மேல் விழுந்த பறவை எச்சத்தை துடைத்துப் போட்டு விட்டுப் போகிறான். அங்கே வரும் குறுந்தாடி வைத்த ஒரு ஓவியர், தன் மாணவனிடம், அந்தக் காகித்தை எடுத்து ஆச்சரியத்துடன்)

ஓவியர் : வாவ்.. வாட் எ மாடர்ன் ஆர்ட்.. இட்ஸ் அமேசிங்...

Monday, November 14, 2005

கங்குலி ரசிகர்கள் மன்னிக்கவும்!

Image hosted by Photobucket.com

(டியர் கங்குலி ரசிகர்களே! இது ச்சும்மா ஜாலிக்குத்தான். ர்ரொம்ப ஓவரா இருந்தா மன்னிக்கவும். வெகுண்டெழுந்து என் கொடும்பாவியை எரிக்கும் அளவுக்குப் போய் விடாதீர்கள். ஓ.கே.வா!)
நேற்றைய தினமணிக் கதிர் - லொள்ளு தர்பார்


ஒரு புலியின் கதை!

'உனக்கு முட்டை தெரியும்! நூறுக்கு எத்தனை முட்டை வரும்னு தெரியுமா' என்று கேட்டபடி பச்சைக் குழந்தை ஒன்று தொட்டிலிலிருந்து சிரிக்கிறது.
'இனி சதுரமான பந்தை வைச்சு விளையாண்டாதான் நீ மேட்சுக்கு மேட்ச் பிப்டியாவது அடிக்க முடியும். உடனே ஐ.சி.சி. ரூலை மாத்து...." என ஒரு சாமியார் முகத்தில் குங்குமத்தை அள்ளி வீசிகிறார்.
'அதிகமா வாய் பேசுற கேப்டனும்அதிகமா சிங்கிள் டிஜிட்ல அவுட் ஆகுற பேட்ஸ்மேனும் டீம்ல நிலைச்சதா சரித்திரமே இல்லை' என அசரீரியாக ஒலிக்கிறது ரஜினியின் குரல்.
'லெக் ஸ்டெம்புக்கும், மிடில் ஸ்டெம்புக்கும் நடுவுல எத்தனை ஸ்டெம்ப்ஸ் இருக்கும்? பதில் சொல்லப் போறீயா இல்லையா?' என்று கேட்டபடி ஒரு பேட்டை கிரெக் சாப்பல் சுழட்டி எறிய, அலறி அடித்து எழுந்திருக்கிறார் முன்ன்ன்னால் கேப்டன் கங்குலி.

''அடச்சீ கனவா! ரொம்ப டார்ச்சர் பண்ணிட்டாங்கப்பா! நிம்மதியா அஞ்சு நிமிஷம் தூங்கக்கூட முடியல. தூங்குனா நிரந்தரமா வீட்டுல படுத்து தூங்கச் சொல்லிருவாங்களோன்னு பயமா இருக்குது. பேசாம வேற ஏதாவது நாட்டு டீம்ல இடம் கிடைக்குதான்னு ச்சும்மா ட்ரை பண்ணிப் பாப்போமா!'' என கங்குலி கடுமையாய் யோசித்துக் கொண்டிருக்கும்போதே எஸ்.எம்.எஸ். ஒன்று செல்லை வந்தடைகிறது. அதில்..

''தேசிய கீதம் பாட, நூடுல்ஸ் பண்ண, பல் தேய்க்க, பத்து வரி பார்த்து எழுத, ஒரு பலூனை ஊதி வெடிக்க வைக்க இதுக்கெல்லாம் எவ்வளவு நேரம் ஆகுமோ அவ்வளவுதான் ஆகும் கங்குலி பெவிலியன்ல இருந்து பேட்டோட வந்துட்டுப் போறதுக்கும். கங்குலி - எதிரணியினர் விரும்பும் இணையற்ற கேப்டன்.. ப்டன்.. டன்.. ன்!''

டென்சனாகி எஸ்.எம்.எஸை காலி பண்ணுகிறார்.

போன் அடிக்கிறது. எடுக்கிறார்.
"சார், எல்லாரும் ரெடி ஆகிட்டோம். நீங்க வந்தா ஷாட் எடுத்துரலாம். ஒரு அரை மணி நேர வேலைதான். வந்துட்டீங்கன்னா, இன்னும் ரெண்டு நாள்ல விளம்பரம் டீவியில வர ஆரம்பிச்சுரும்!" என எதிர்முனை ஒலிக்க,வழக்கமான கெத்துடன் கங்குலி,
"ஓ.. என்ன மேன் இது.. ரொம்ப தொல்லையாப் போச்சு.. ஓ.கே. வந்து நடிச்சுத் தொலைக்கிறேன்!" என போனை வைக்கிறார்.
'ஆஹா நமக்கு இன்னும் மாஸ் இருக்கு டோ ய்! விளம்பர வருமானம் குறையவே இல்ல. இதை எப்படியாவது தக்க வைச்சுக்கணும்' என நினைத்துக் கொண்டே ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு கிளம்புகிறார்.
அங்கே...
கங்குலி : என்ன மேன், கோக்கா, பெப்ஸியா என்ன ப்ராடக்ட்?
டைரக்டர் : டிரிங்ஸ் இல்லீங்க!
கங்குலி : அப்ப என்ன புது கார், பைக்.. இல்ல ஏதாவது பிஸ்கட் விளம்பரமா?டைரக்டர் : இல்லீங்க சார், இது சேர் விளம்பரங்க! நான் ஸீனைச் சொல்லுறேன் கவனமா கேளுங்க! அதுக்கு முன்னாடி மேக் அப் போட்டுக்கிட்டு வந்துருங்க! இந்த விளம்பரத்துல உங்க கூட டோனியும் நடிக்கிறாரு.
கங்குலி : ஓ அப்படியா.. ரொம்ப ஜூனியர் அவன்.. அவன் கூடல்லாம் நடிக்க வேண்டியதிருக்கு. சரி என்ன செய்ய அட்ஜெஸ்ட் பண்ணிக்கிறேன். ஆமா எப்பவும் இப்படி ஒரிஜினல் கெட்-அப்ல பண்ணுறதுதான வழக்கம், எதுக்குயா மேக்அப்?
டைரக்டர் : உங்களை வைச்சுத்தான் ப்ராடெக்ட் பிக்-அப் ஆகப் போகுது. அதுக்கு கெட்-அப் முக்கியம். அப்பத்தான் ரியலா இருக்குங்க! ப்ளீஸ் போட்டுக்கிட்டு வாங்க!
(பத்து நிமிடம் கழித்து, மேக்-அப் அறையிலிருந்து டென்சனாக கத்தியபடி ஓடி வருகிறார் கங்குலி.)
கங்குலி : யோவ் டைரக்டர்.. என்னையா இது.. தலையில் நரைச்ச முடி விக் வைச்சு, வெள்ளை மீசை வைச்சு கிழவன் மாதிரி ஆக்கச் சொல்லியிருக்க.. என்ன ஸீன் எடுக்கப் போற.. சொல்லு!
டைரக்டர் : டோ னி உங்ககிட்ட ஓடி வந்து, 'தாத்தா அந்தக் காலத்துல நீங்க கிரிக்கெட் விளையாண்ட கதையைச் சொல்லுங்களேன்'னு கேட்பாரு! நீங்களும் பழைய நினைவுகளில மூழ்குவீங்க! அப்ப ப்ளாஷ்பேக்ல நீங்க ஒரு காலத்துல அடிச்ச சூப்பர் ஷாட்டையெல்லாம் காட்டுறோம். கண்களின் ஓரத்துல நினைவுகள் ஆனந்தக் கண்ணீரா கசிய நீங்க அப்படியே அந்த ஈஸி சேர்ல சாயறீங்க... உடனே பின்னணில 'எடக் மடக் ஈஸி சேர்! நினைவுகள் என்றும் உங்கள் வசம்!'னு குரல் ஒலிக்கும்!
கங்குலி : முடிவே பண்ணிட்டீங்களா.. ஆளாளுக்கு அலம்பல் பண்ணுறீங்க! நான் என்ன கேணையனா.. இந்த விளம்பரத்துல நடிக்க முடியாது. வேற ஆளைப் பார்த்துக்கோ!
என சொல்லி விட்டு அங்கிருந்து படு கோபமாகக் கிளம்புகிறார் கங்குலி.
மைதானத்திற்குள் நுழைகிறார்.

அங்கே சச்சின், டிராவிட், பதான் நெட் பிராக்டீஸ் பண்ணிக் கொண்டிருக்க, உடன் கோச் சாப்பலும் நிற்கிறார்.

கங்குலி : என்ன பாய்ஸ்.. எப்படி இருக்கீங்க?
சாப்பல் : ஹே மேன், ஹூ ஆர் யூ?
கங்குலி : (மனதிற்குள்) மவனே ரொம்பத்தான் ரவுசு. நக்கல் பண்ணுறியாடி. இருடி. உன்னை பின்னால கவனிச்சுக்கிறேன். ஏதாவது பேசுனா நீ அதையே பெரிசு பண்ணிருவ! (குழைவாக) ஹலோ சார்! எப்படி இருக்கீங்க?
சாப்பல் : யார் நீ? கிரவுண்ட்ல பால் பொறுக்கிப் போடுற பையனா..
கங்குலி : (பல்லைக் கடித்துக் கொண்டு) என்ன சச்சின், சார் செம ஜோக் அடிக்காருல்ல!
சச்சின் : உங்களை நான் எங்கேயோ பார்த்த நியாபகம் இருக்கு. இப்ப ப்ராக்டீஸ் பண்ணிக்கிட்டிருக்கேன். டிஸ்டர்ப் பண்ணாதீங்க!
பதான் : சார், கொஞ்சம் ஓரமா நிக்கறீங்களா.. பந்து போடணும்.
டிராவிட் : தம்பி, கொஞ்சம் ஓரமா நில்லுப்பா! பந்து படாத இடத்துல பட்டுடப் போகுது! இந்தப் பந்து பட்டா வலி உயிர் போகும். ஓரமாப் போப்பா!
கங்குலி : (மனதிற்குள்) அடப்பாவிகளா டோட்டலா நம்ம யாருன்னே மறந்துட்டாங்களே.. இதை இப்படியே விடக்கூடாது. (சத்தமாக சிரித்தபடி) ஹே.. கைஸ்! என்னைத் தெரியலையா.. நான் தான்.. சவுரவ்.. கேப்டன்..
சாப்பல் : (மற்றவர்களிடம்) பாய்ஸ்.. மழை வர்ற மாதிரி இருக்கு.. பிராக்டிஸ் ஓவர். போகலாம்!
கங்குலி : பாய்ஸ்.. நில்லுங்க.. நான் தான் சவுரவ்.. லெப்ட் ஹேண்ட் பேட்ஸ்மேன்.. உங்க பழைய கேப்டன்..நில்லுங்க.. யாரும் கவனிக்காமல் செல்ல, கங்குலி அவர்கள் முன் ஓடிச் சென்று, கைகளில் ஒரு பேட்டை எடுத்து அதை தலைக்கு மேல் தூக்கிக் கொண்டு, வாயில் ஒரு பந்தை கவ்விக் கொண்டு, 'மூன்றாம் பிறை' கமல் மாதிரி ஆடி, ஓடிக் காண்பிக்கிறார். 'அய்யோ பாவம்' என பரிதாபப்பட்ட டிராவிட் அந்த பேட்டில் தன் ஆட்டோ கிராஃபை போட்டுவிட்டுச் செல்கிறார்.அழும் நிலைக்கு வந்து விடுகிறார் கங்குலி.

அப்போது எங்கேயோ ஒரு குரல் பாடுகிறது..
"ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே!
பொலபொலவென குறைந்து போன
ஸ்ட்ரைக் ரேட், ரன் ரேட் ஞாபகம் வருதே!
ஏதோ ஒன்றை 'தொலைத்ததைப்' போல
ஏதோ ஒன்றை 'இழந்ததைப்' போல
காமெண்டேட்டர் வேலை கிடைத்தது போல
உதடுகள் ஓரம் வர்ணனை வருதே!"
என பாடல் ஒலிக்க..

''டேய் எவண்டா அவன்.. தைரியம் இருந்தா மூஞ்சிக்கு நேர வந்து பாடுடா! சிங்கம்டா!" என கர்ஜிக்கிறார் கங்குலி.
"இல்லீங்கண்ணே! நீங்க பெங்கால் டைகர்! அதையும் மறந்துட்டீங்களா!'' என எங்கிருந்தோ ஒரு குரல் ஒலிக்க, பதிலேதும் பேசாமல் இடத்தைக் காலி பண்ணுகிறார் கங்குலி.

கங்குலி வீட்டிற்கு வருகிறார்.
குரியர் ஒன்று வருகிறது.
அதில்..
'டியர் சவுரவ்..நாங்கள் சங்கம் ஒன்றை நடத்தி வருகிறோம். அதில் இணைவதற்கான முழுத் தகுதியும் தற்போது உங்களுக்கு இருக்கிறது. சங்கத்தில் சேர ஆரம்பக் கட்டணம் ஏதுமில்லை. வருடக் கட்டணம் ரூ.100 மட்டும். விரைவில் சங்க உறுப்பினர்களுக்கென பென்சன் திட்டமொன்றையும் ஆரம்பிக்கப் போகிறோம். சங்கத்தில் சேர அணுக வேண்டிய முகவரி : கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றோர் & ஒடுக்கப்பட்டோர் சங்கம், #007, சைபர் ரோடு, புதுதில்லி.
இப்படிக்குதலைவர் : முகமது அசாரூதின்
ஆலோசகர் : அஜய் ஜடேஜா
பொருளாளர்: வினோத் காம்ப்ளி
படித்து முடித்து விட்டு உச்ச கட்ட டென்சனில் அந்தப் பேப்பரை சுக்கு நூறாக்குகிறார் கங்குலி.

(ஹலோ.. போதும் நிறுத்துங்க.. சின்னபுள்ளத்தனமால்ல இருக்கு! ஒருத்தர் மாட்டுனாப் போதும். ரொம்பத்தான் ஓவரா நக்கலடிச்சே ஓய்ச்சுருவீங்களே! இனி கங்குலி பத்தி பேசப்படாது சொல்லிட்டேன்.)

Wednesday, November 09, 2005

பஜ்ஜி-ஒரு லட்சிய வீரனின் கதை!

கோடம்பாக்கத்தில் எட்டுக்கு எட்டு அடி அளவுள்ள ஒரு பேச்சுலர் ரூம்.விரல்களின் இடுக்கில் கசிகின்ற புகையோடு மணிரத்னம், ஷங்கர், செல்வராகவன்... ஆக ஆசைப்பட்டு சொந்த ஊரை விட்டு ஓடி வந்த வருங்கால டைரக்டர்கள் மூவர். பெயரென்ன கேக்கறீங்களா.. ..ம், என்ன வைக்கலாம்! முதலில் சொன்ன பெயர்களே இருந்துட்டுப் போகட்டுமே! அவங்க என்ன கோச்சுக்கவா போறாங்க! செல்லுலாய்டு கனவுகளோடு சீரியஸாக கதை விவாதம் நடக்கிறது. நம் காதை கொஞ்சம் உள்ளே அனுப்பினோம் கதை கேட்க! கேட்டதிலிருந்து...
மணி : இது கதை. சின்னக் கதை. பழசுதான். ஆனா புதுசு. சொல்ற விதம் புதுசு. ஷங்கர் : சொல்லு. பழைய இட்லியை, உப்புமாவா மாத்துறதில்லையா! அது இட்லிதான். ஆனா இப்ப உப்புமா! அப்படித்தான் கதையும்!
செல்வா : சதைகள்ல உணர்ச்சியைக் காண்பிச்சுக் கவுத்துட்டா மக்கள் அநாவசியமா கதையைத் தேட மாட்டாங்க! நீ கதையோட ஒன் லைனைச் சொல்லு!மணி : கேட்கணும். கவனமாக் கேட்கணும். ஒரு கிழவி. வயசானவ!ஷங்கர் : டேய், வயசனாத்தாண்டா அவ கிழவி. மேல போ!
மணி : சுடுறா!
ஷங்கர் : தீவிரவாதிகளை காஷ்மீர் பார்டர்ல போயி தனி ஆளா நின்னு காலி பண்றாளா! செம ஸ்டோ ரிடா மச்சான்!
மணி : தேவை. பொறுமை தேவை. புரியும். கதை. இன்னும் சொல்லல!செல்வா : டேய் படுத்தாதடா. வார்த்தைகளை இன்ஸ்டால்மென்ட்ல பேசாம தொடர்ந்து பேசுடா!மணி : கிழவி இருக்கா. தொழில் வடை சுடுறது. எதிரி ஒருத்தன். ஒரே ஒருத்தன். பேரு காக்கா. நிஜக் காக்கா. வலைவிரிக்கிறான் தினமும் வடைக்கு. கிடைக்குது. ஒருநாள் கிடைக்குது. கொண்டு போயிடுறான் வடையை தன்னோட மரக்கிளைக்கு. வடை. ஆசை. நிறைவேறுன சந்தோஷம். ஆனா நிறைவேறல. வருது. பிரச்னை வருது. நரியா பிரச்னை வருது. காக்காவை நரி மயக்குது. வசியம் பண்ணுது. புத்தியால. வார்த்தைகளால. சொல்லுது. பாடச் சொல்லுது. பாட்டு. காக்கா வாய் தொறக்குது. வடை கீழே விழுது. எடுக்குது நரி. முடியது கதை. இது கதையில்ல. முழு கதையில்ல. செதுக்கணும். மாத்தணும். நிறைய்ய உழைக்கணும்.
ஷங்கர் : நல்ல தீம்டா! இதுதான் கரு. ஆனா இதை வைச்சு நாம உருவாக்குற கதையால எல்லாரும் மிரளணும். செல்வா : முதல்ல பாட்டி கேரக்டரைத் தூக்கணும். பாட்டியை மெயினாப் போட்டா நாம மூணு பேரும்தான் படத்தை மாத்தி மாத்தி பாக்க வேண்டியது வரும். அதனால பாட்டி ரோலை உருவிட்டு, அங்க ஒரு இளம் பெண் கேரக்டரை சொருகிரலாம்.
ஷங்கர் : அப்ப அந்த கேரக்டருக்கு நமீதா ஓ.கே. நமீதா ஸ்கீரின்ல வடை சுட்டாப் போதும். பிரம்மாண்டமா இருக்கும்.
செல்வா : வடை அப்படிங்கிற கேரக்டர் கூட ரொம்ப நாள் இருந்ததால ஊசிப்போச்சு. அதனால வடையை மாத்துறோம்.
ஷங்கர் : நேற்றைக்கு வடைன்னா, இன்னிக்கு வடைகறி!
செல்வா : அப்பா ராசா, எண்ணையில பொரிக்கறாப்ல ஏதாவது சொல்லுடா!மணி : மாடர்ன் நமீதா சுடுறா! டெல்லி அப்பளம் சுடுறா!
ஷங்கர் : டேய் இது உனக்கே ஓவராத் தெரியல! அம்மாம் பெரிய டெல்லி அப்பளத்தை சிங்கிள் காக்கா எப்படிடா தூக்கிட்டுப் போகமுடியும்? அநியாயமாப் பேசாதடா! ஏதாவது சின்னதா மாடர்னா சொல்லு.
செல்வா : ஆங். அப்ப பிரெட் வைச்சுக்கலாம். நம்மாளுங்கதான் சாஃப்டா எது கிடைச்சாலும் உடனே கரைச்ச கடலை மாவுல பொரட்டி எடுத்து, கொதிக்கிற எண்ணையில நீச்சலடிக்க வைச்சி, வாய்க்குள்ள தள்ளிடுறாங்களே! பிரெட் பஜ்ஜின்னு வைச்சுக்கலாம்.
மணி : இடம் முக்கியம். நமீதா இருக்குற இடம் முக்கியம்.
செல்வா : ஏதாவது தெரு முனையில கடையைக் காண்பிக்க வேண்டியதுதான!
ஷங்கர் : இல்ல, இதுல பிரம்மாண்டம் முக்கியம். அதனால தாஜ் கோரமண்டல் பைவ் ஸ்டார் ஹோட்டல்.. வாசலுக்கு எதிர்த்தாப்ல கடையை வைச்சுக்கலாம்.
செல்வா : அப்ப, காக்கா, தாஜ் ஹோட்டலோட மொட்டை மாடியில குடியிருக்குது. பணக்காரக் காக்கா! எப்படி!
ஷங்கர் : பணக்காரக் காக்கா ஹார்ட் பேஷண்ட். எண்ணெய் பலகாரங்கள் சாப்பிடக் கூடாது. அதனால பஜ்ஜி மேல காக்காக்கு ஒரு கண்ணு.
மணி : போதாது. சென்டிமென்ட் போதாது. வேணும். வேற ப்ளாஷ்பேக்!செல்வா : அப்ப காக்காவோட அம்மா கதை ஒண்ணை ப்ளாஷ்பேக்ல புகுத்திரலாம். இதே மாதிரி நமீதாவோட அம்மா கடையில் வடையத் திருடப் போன அம்மா காக்கா, ஸ்லிப் ஆகி எண்ணெய்ச் சட்டியில விழுந்து செத்துப் போயிருது. அதைத் தன்னோட ரெண்டு கண்ணால பாக்குற மகன் காக்கா மனசு முழுக்க வெறியோட அலையுது.
ஷங்கர் : நெஞ்சை நக்குது!மணி : காக்கா.. பஜ்ஜி.. காக்கா.. பஜ்ஜி.. காட்டுறோம் ரெண்டையும் மாத்தி மாத்தி!
ஷங்கர் : முந்நூறு அடி உயரத்துல இருந்து காக்கா, நமீதா கடையைப் பாத்து பறந்து வர்றதை காக்கா ஆங்கிள்ல காட்டுறோம். இதுக்கு ஹெலிகாப்டரை யூஸ் பண்ணி ஷாட் வைச்சுக்கலாம்.
மணி : வேணும். இங்க பரபரப்பு வேணும். மேல இருந்து காக்கா பறந்து வர்றதுக்குள்ள இருந்த ஒரு பிரெட் பஜ்ஜியும் ஆயிடுது காலி. ஒருத்தன் வாங்கிட்டுப் போயிடுறான்.
செல்வா : தூள்மா! அப்படியே பரபரப்போட இங்க கொஞ்சம் கிளுகிளுப்பையும் தூவிரலாம். இவ்வளவு தூரம் பறந்து வந்தது வேஸ்ட் ஆயிடக் கூடாதேன்னு காக்கா வந்த வேகத்துல நமீதாக்கு லிப் டூ லிப் ஒரு கிஸ் அடிச்சுட்டுப் போயிடுது! எப்படி!
மணி : கிஸ்.. செம கிஸ்! கிக்.. செம கிக்!
ஷங்கர் : ஆனா காக்கா கதாநாயகிக்கு கிஸ் அடிச்சா மக்கள் ஒத்துக்க மாட்டாங்களே! அதுபோக நம்ம கதையில இன்னும் கதாநாயகன் கேரக்டரையே கொண்டு வரலையே!
செல்வா : காக்காதான் கதாநாயகன். வேறேந்த புது கேரக்டரைக் கொண்டு வந்தாலும் வலுக்கட்டாயமா திணிச்ச மாதிரி ஆயிரும். ஆங்.. ஐடியா! கேரக்டருக்கு ஏத்தாப்ல எப்படி வேணும்னாலும் உடம்பை மாத்திக்குற கமல், விக்ரம், சூர்யா இவங்க யாரையாச்சும் காக்கா கெட்-அப்ல நடிக்க வைச்சுரலாம்!
ஷங்கர் : செம ஐடியா மச்சி! கிஸ் அடிச்சுட்டு வந்த கிக்ல காக்கா ஹீரோ நமீதாகூட ஒரு கனவு டூயட் பாடுறாரு!
மணி : சூப்பர். அடுத்த அட்டெம்ப்ட். இது வேற பஜ்ஜி. ஜெயிச்சிடுச்சி! பஜ்ஜி இப்ப காக்கா வாயில! கண்ணீர் நமீதா கண்ணுல!
ஷங்கர் : ஓ.கே. இப்ப வில்லன் கேரக்டர் நரியைக் கொண்டு வர்றோம். ஆனா நரி தாஜ் கோரமண்டல் வாசல்ல நின்னுக்கிட்டு, அவ்ளோ உயரத்துல இருக்குற காக்காகிட்ட 'பஜ்ஜியைத் தா! தா!'ன்னு கேட்டு வாங்க முடியாதே! வேணும்னா ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பலாம்.
மணி : வேண்டாம். நரி வேண்டாம். தேவை பவர்ஃபுல் வில்லன்! உயரமான வில்லன். வைச்சுக்கலாம் டினோசரை!
செல்வா : சூப்பர். டினோசர் வில்லன் காக்காவோட பஜ்ஜிக்கும், கூடவே நமீதா கடையில இருக்குற பஜ்ஜிகளுக்கும் ஆசைப்படுறான். ஹீரோ காக்கா, ஹீரோயின் நமீதாவையும், தன்னோட லட்சிய பஜ்ஜியையும் எப்படி காப்பாத்தறான்னு சொல்லுறோம்.
ஷங்கர் : ஹீரோ காக்காகிட்ட பேசி, மயக்கி, அதை பாட்டு ஒண்ணு பாடச் சொல்லி கெஞ்சுது டினோசர். அப்ப காக்கா ஒரு பாட்டு பாடுது. அது குத்துப்பாட்டு. காக்காவோட சிந்தனையில அந்த சிங்கிள் பாட்டுக்கு நயன்தாரா டான்ஸ் ஆடுற மாதிரி வைச்சுரலாம்.
மணி : முடியுது பாட்டு. கீழே விழுகுது பஜ்ஜி.
செல்வா : முந்நூறு அடி உயரத்துல இருந்து விழுற பஜ்ஜியை கேட்ச் பிடிக்க காக்கா, டினோசர், நமீதா மூணு பேரும் டிரை பண்ணுறாங்க.
மணி : இது க்ளைமாக்ஸ். வேணும் மெஸேஜ்.
செல்வா : டினோசர் பஜ்ஜியை கேட்ச் பிடிச்சுட்டு, நமீதாவையும் தூக்கிட்டு மௌண்ட் ரோட்டுல ஓடுது.
ஷங்கர் : காக்கா ஹீரோ துரத்துது. இந்த சேஸிங் சீனை செம த்ரில்லிங்கா எடுக்கணும். செல்வா : ஓடிக்கிட்டிருக்கும்போதே பஜ்ஜியை லைட்டா டேஸ்ட் பண்ணிப் பாக்குற டினோசர் அதை வேண்டாம்னு துப்பிடுது.
மணி : சொல்லணும் இங்க மெஸெஜ். டினோசர் நான் வெஜ். பஜ்ஜி வெஜ். பிடிக்கல! அதான் பிடிக்கல! துப்பிடுது.
ஷங்கர் : கூவத்துல விழப் போன பஜ்ஜியைக் கைப்பற்றிட்டு, எப்படி நமீதாவை டினோசர்கிட்ட இருந்து பைட் பண்ணி காக்கா ஹீரோ காப்பாத்துதுன்னு துடிக்கத் துடிக்கக் காட்டி, கடைசியில ஒரு லவ் சென்டிமென்ட்டோட படத்தை முடிக்கிறோம்.
செல்வா : சரி, வா மச்சான். ரொம்ப சிந்திச்சிட்டோம். பசிக்குது. நாயர் கடையில சிங்கிள் டீயை ஒன் பை த்ரீ குடிச்சிட்டு வந்து, நரி, திராட்சை பழம் பறிக்கப் போன கதையை டெவலப் பண்ணலாம்.

**********
(லொள்ளு தர்பார் - தினமணிக் கதிர் - இரு வாரங்களுக்கு முன்பு)